நெடுஞ்சாலை வாழ்க்கை - 39

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
காத்திருப்பு எனும் வாதை!கா.பாலமுருகன் , படங்கள்: ரமேஷ் கந்தசாமி

னிமலைதான் என் கனவிலும் நினைவிலும். ஆவலுடன் கேபினைவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தேன். வடக்குத் திசையை ஆவலுடன் பார்த்தேன். மேகம் முழுமையாக மலைகளை மூடியிருந்தது ஏமாற்றமாக இருந்தது. சரி, வெயில் ஏறினால் மேகம் மறைந்துவிடும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என காலைக்கடன் முடிக்க ஏதாவது இடம் கிடைக்குமா எனத் தேடினேன். நாங்கள் நின்றிருந்த மலைப் பகுதி, வெள்ளைக் கூழாங்கற்களால் ஆன மலையைப் போல இருந்தது. அதை நம்பி எந்த சரிவிலும் மேட்டிலும் ஏற முடியவில்லை. காலை வைத்தவுடன் கற்கள் நழுவி உருள ஆரம்பித்தன. சாலையில் நின்றிருந்த லாரிகளின் டிரைவர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் மேலும் கீழுமாக சாலையில் அலைந்துகொண்டிருப்பதன் அர்த்தம் விளங்கியது. ஒரு வழியாக ஒரு கிராமத்துக்குச் செல்லும் கிளைச் சாலையைக் கண்டுபிடித்து, வாட்டர் பாட்டில்கள் சகிதம் புறப்பட்டோம்.

பூமராங்போல வளைந்திருந்த அந்த மலைச் சாலையின் மறுமுனையில் கடைகள் இருப்பது கண்ணுக்குத் தெரிய... அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். சுமார் 2 இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கடைகள் இருந்தன. டீ, பிஸ்கெட், கூல் ட்ரிங்ஸ், பிரெட் போன்றவை மட்டுமே அங்கு கிடைத்தன. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் லாரி திரும்பினோம். லாரிகள் செல்ல எப்போது வழி திறக்கும் என்பது தெரியாததால், எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பரமேஸ்வரன் சமையலுக்கான வேலைகளை ஆரம்பிக்க... நான் அருகே வேறு தமிழக லாரிகள் நிற்கின்றனவா எனத் தேடிப் புறப்பட்டேன். அன்று ஸ்ரீநகரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வதாகச் செய்தி. எப்படியும் நிகழ்ச்சி முடியும் வரை மேலே செல்ல அனுமதி கிடைக்காது என்பது டிரைவர்களின் அனுமானம். வரிசை கட்டி நின்ற லாரிகளில் ஒவ்வொரு மாநிலமாக ஒன்றுகூட ஆரம்பித்தார்கள். பதான்கோட்டில் இருந்து நம்முடன் வந்த லாரிகளை அடையாளம் கண்டு பேசினேன். ஆங்காங்கே இருந்த இடைவெளிகளிலும் மாநில வாரியாக அட்ஜஸ்ட் செய்து லாரிகளை நிறுத்த, தமிழக லாரிகள் நான்கும் ஒன்று சேர்ந்தன. சமையல் பொருட்களும் சமைத்த உணவுகளும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள... தமிழகத்தின் நெடுஞ்சாலை ஓரம் ஒன்றில் நிற்பது போன்ற உணர்வு.

அங்கிருந்த டிரைவர்களில் வாழப்பாடியைச் சேர்ந்த கோவிந்தன் மட்டும்தான் வயதில் சிறியவர். ஆனால், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஈரோட்டைச் சேர்ந்த பழனிவேலு, பெருந்துறையைச் சேர்ந்த பழனிசாமி, சென்னியப்பன் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் அனுபவம். கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தோம். எல்லோரும் மையமாகச் சொன்ன விஷயம், டோல்பூத்துகள் பற்றித்தான். சாலை போட்ட கான்ட்ராக்ட்காரர் காசு செலவழித்திருப்பார்தான்; அதைத் திரும்ப எடுக்க வேண்டும்தான். இவ்வளவு செலவு, இவ்வளவு ரூபாய், இத்தனை ஆண்டுகளுக்கு வசூலிக்க வேண்டும் என்ற கணக்கு இருக்குமல்லவா? காருக்கு இவ்வளவு; பஸ்ஸுக்கு இவ்வளவு, லாரிக்கு இவ்வளவு என வகைவாரியாக பட்டியல் போட்டு டோல்பூத்தின் ஒரு கிலோ மீட்டருக்கு நெடுக வைத்திருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு செலவு, எத்தனை நாள் வசூல் செய்வோம் என்ற கணக்கு எங்கேயும் இல்லை. அது மட்டுமா? வரும்போது 350 ரூபாய் கொடுத்த டோல்பூத்தில், திரும்பும்போது 400 ரூபாயாக எப்படி உயர்த்திக்கொள்கிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வம்பாடுபட்டு மிச்சம் செய்த காசு எல்லாம் இந்த டோல்பூத் பூதங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் இவர்களின் ஆதங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick