அன்பு வணக்கம் !

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

எட்ட முடியாத தூரத்தில் இருந்தாலும், நிலாவை நமக்கு நெருக்கமானதாகவே உணர்கிறோம். அதேபோலத்தான், பலரால் எட்ட முடியாத இடத்தில் இருந்தாலும் அரை நூற்றாண்டாக உலகம் முழுதும் இருக்கும் கார் பிரியர்களின் காதலைப் பெற்ற கார், ஃபோர்டு மஸ்டாங். ஃபோர்டு நிறுவனம் நம் நாட்டுக்கு வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அது இப்போதுதான் முதன்முதலாக மஸ்டாங் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மஸ்டாங் மீது அதன் ரசிகர்களுக்கு இருக்கும் மயக்கத்துக்கு முக்கியக் காரணம் - அதன் வேகமும், 401 bhp சக்தியை அள்ளித்தரும் 5.0 லிட்டர் சக்திகொண்ட இதன் இன்ஜினும் மட்டுமல்ல; இந்த காரின் ஒவ்வோர் அசைவும் அவர்களுக்கு அதிசயம்!

உலகம் முழுதும் மஸ்டாங் காருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சுமார் 3,000 திரைப்படங்களில் நடித்திருக்கிறது. மஸ்டாங்கை நம் ஊர் சாலைகளிலும் விரைவிலேயே பார்க்க முடியும். நம் நாட்டுக்கு ரைட் ஹேண்ட் டிரைவ் மாடலில் முதன்முதலாக அறிமுகமாகி இருக்கும் மஸ்டாங்கின் ஓட்டுதல் அனுபவம் குறித்து புகைப்படங்களோடு விரிவாகப் பேசியிருக்கிறோம்.

ரெனோ டஸ்ட்டர், ஹோண்டா BR-V, மாருதி S-க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா - இந்த நான்குமே ஒன்றுக்கு மற்றொன்று மாற்று அல்ல. இருந்தாலும், 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரையான பட்ஜெட்டில், காம்பேக்ட் எஸ்யுவியோ அல்லது க்ராஸ்ஓவரோ வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த நான்கும்தான் சாய்ஸ். டஸ்ட்டரின் புதிய ஃபேஸ்லிஃப்ட்டும் அறிமுகமாகி இருக்கிறது.

கவாஸாகி ZX-14R பைக்கை எதிர்கொள்ள, சுஸூகி தன் ஹயபூஸாவின் விலையைக் கணிசமான அளவுக்குக் குறைத்து, மீண்டும் களம் இறக்கி இருக்கிறது. அதனால், சரித்திரப் பெருமை வாய்ந்த ஹயபூஸாவா அல்லது மாடர்னான கவாஸாகியா என்ற கேள்விக்கும் விடை காண்பது அவசியமாகிறது.

இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த இதழில் விடை காண முயற்சி செய்திருக்கிறோம்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick