கிருஷ்ணகிரி டீம் 24!

பைக் கிளப், பயணம்தமிழ் / படங்கள்: எம்.விஜயகுமார்

‘24’ பட ஹீரோ யார் என்றால் என்ன சொல்வீர்கள்? சூர்யாதானே! ஆனால், கிருஷ்ணகிரியில் சென்று விசாரித்தால், ‘‘24 ஹீரோ, முஹம்மது ஆச்சே?’’ என்கிறார்கள். ‘24’ என்பது கிருஷ்ணகிரியில் 24 X 7 இயங்கும் பைக் கிளப்பின் பெயர். ‘மோட்டார் விகடன் ஃபோட்டோ ஷூட்; 4 மணிக்கு மீட்’ என்று சின்னதாக வாட்ஸ்-அப்பினால், மொத்த டீமும் சொன்ன இடத்துக்கு தங்கள் பைக்குடன் வந்து போஸ் கொடுக்கிறார்கள்.

‘‘அதுக்காக எங்களை வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சுடாதீங்க!’’ என்கிறார்கள் கோரஸாக. ‘‘24 மணி நேரமும் அலெர்ட்டாக இருப்பதால் ‘டீம் 24’ என்று பெயரா?’’ என்றால், ‘‘அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. கிருஷ்ணகிரியின் ரெஜிஸ்ட்ரேஷன் எண் TN24... அதனால்தான் எங்கள் பைக் கிளப்புக்கு ‘டீம் 24’னு பேர் வெச்சோம்!’’ என்கிறார், ‘டீம் 24’ பைக் கிளப்பின் தலைவர் முஹம்மது முஜாஸம். கிருஷ்ணகிரியில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் மேனேஜராகப் பணிபுரிகிறார் முஹம்மது.

முஹம்மதுவை ஒரு ரியல் லைஃப் ‘அம்பி’ என்று சொல்லலாம். அதுவும் சாலை விஷயங்களில் முஹம்மது ரொம்பவே நியாயவாதி. யாராவது சிக்னலில் நிற்காதபோது, ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டும்போது, சீட் பெல்ட் போடாமல் காரில் பறக்கும்போது, அவரால் ஆதங்கப்படத்தான் முடிந்தது. மொத்தத்தில் சாலை விதிகள் மீது ரொம்பப் பாசம் முஹம்மதுவுக்கு. இதைத் தட்டிக் கேட்பதற்கு சினிமா ஹீரோவால்தான் முடியும். ‘‘இதுக்காகவேதான் நான் பைக் கிளப் ஆரம்பிச்சேன்!’’ என்று சொல்லும் முஹம்மதுவின் ‘டீம் 24’ பைக் கிளப்பின் முக்கியப் பணி - சாலைப் பாதுகாப்புதான். முன்பைவிட கிருஷ்ணகிரி பகுதியில் இப்போது சாலை விதிகளை மக்கள் மதிக்கவும் செய்கிறார்கள் என்று நம்புகிறார்.

‘சும்மா பைக் கிளப் ஆரம்பிச்சோம்; ஜாலி ட்ரிப் அடிச்சோம்’ என்பதாக இல்லாமல்... Wear Helmet, Respect Signals, Save Trees, Seed Trees, Save Forest என்று சமூக நோக்கங்களைத் தாங்கியே தனது பைக் கிளப்பின் நாடி துடிப்பதாகப் பெருமைப்பட்டுச் சொல்கிறார் முஹம்மது. ஏலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் என்று ஏகப்பட்ட ஏரியாக்களுக்கு சமூக நல நோக்கில் ரைடு சென்று வந்திருக்கிறார்கள் டீம் 24 உறுப்பினர்கள். இருந்தாலும், தங்கள் கிளப்பின் சாதனையாக, கிருஷ்ணகிரியில் இருந்தே லடாக் வரை குழுவாகச் சென்றதை நினைவுகூர்கிறார் முஹம்மது. ‘‘எல்லோரும் டெல்லி வரைக்கும் பைக்கை டிரெயின்ல எடுத்துட்டுப் போயோ அல்லது லடாக்கில் வாடகைக்கு எடுத்தோதான் இமயமலைக்குப் போயிருக்காங்க. ஆனால், நாங்க இங்க இருந்தே கிளம்பி லடாக் வரைக்கும் குழுவாகப் போனது ஒற்றுமையை வலியுறுத்திச்சு. செம ஃபன்னான அனுபவம் அது!’’ என்கிறார் முஹம்மது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick