ஸ்கோடா ரேபிட் ஆக்டேவியா அப்டேட்! | First Drive - Skoda Rapid - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஸ்கோடா ரேபிட் ஆக்டேவியா அப்டேட்!

ஃபர்ஸ்ட் டிரைவ், ஸ்கோடா ரேபிட்தொகுப்பு: தமிழ்

‘நம்பிக்கை; அதானே எல்லாம்’ என்று  நடிகர் பிரபு சொல்வதுபோல, நம்பிக்கையோடு ரேபிட்டின் அடுத்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஸ்கோடா இறக்கிவிட்டது. ஸ்கோடாவின் மொத்த விற்பனையில் 70 சதவிகிதம் ரேபிட் மட்டும்தான். இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான், ஐந்து ஆண்டுகளாக மாற்றம் காணாமல் இருந்த ரேபிட்-ல் முதன்முறையாக பல மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்திருக்கிறது. ஸ்கோடாவின் வரலாற்றில் இதை ‘மேஜர் ஃபேஸ்லிஃப்ட்’ என்றுகூடச் சொல்லலாம். இன்ஜின் முதல் பம்ப்பர், இன்டீரியர் வரை ஏகப்பட்ட மாற்றங்களைக் கண்டிருக்கிறது ரேபிட். ‘2017 இறுதிக்குள் 20,000 ரேபிட் கார்களை விற்பனை செய்யவிட வேண்டும்’ என்று தனக்குத் தானே இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது ஸ்கோடா. புதிய ரேபிட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்படி என்ன மாறியிருக்கிறது?

டிஸைன்

முற்றிலும் புத்தம் புதிய கிரில்லே ‘நான் மாறிட்டேன்’ என்று சத்தமாகச் சொல்கிறது. ‘என்னது... சூப்பர்ப், ஆக்டேவியா மாதிரி இருக்கே’ என்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சொன்னீர்கள் என்றால், மிகச் சரி! ஆங்குலர் ஸ்டைல் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், நீங்கள் நினைத்த காஸ்ட்லி கார்களில் இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்கிறது. ‘ஜுவல்-ஷேடோ’ DRL, நிச்சயம் பிரீமியம் லுக். டோர் ஹேண்டில்களில் இருக்கும் க்ரோம் மோல்டிங்கும் நச். ஹெட்லைட்டுக்குக் கீழே இருக்கும் பனி விளக்குகள், ஏர் டேம் கொண்ட பம்ப்பர் டிஸைனும் புதுசு. பின்பக்கம், பம்ப்பரைத் தவிர வேறெந்த மாற்றங்களும் இல்லை. மொத்தமாகப் பார்க்கும்போது, க்ளீனான கோடுகளும் ஷார்ப்பான டிஸைனும் செம ஃப்ரெஷ் அண்டு நீட்.

உள்ளே

பழைய ரேபிட் வைத்திருப்பவர்கள், புதிய காரின் இன்டீரியரைப் பார்த்ததும் லேசாக ஏக்கப்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கியக் காரணம், 6.5 இன்ச் டச் ஸ்கிரீன். ‘இன்டீரியர் மொத்தமாக மாறிடுச்சோ’ என்ற உணர்வை ஏற்படுத்துவதே இந்த டச் ஸ்கிரீன்தான். பழைய காரில் USB வசதி மட்டும்தான். இதில் USB வசதியோடு AUX, ப்ளூடூத் மற்றும் மிரர்லிங்க் கனெக்ட்டிவிட்டி போன்றவை டேஷ்போர்டை பந்தாவாகக் காட்டுகின்றன. சாதாரண க்விட் போன்ற கார்களிலே டச் ஸ்கிரீன் இருக்க, இப்போதாவது ரேபிட்டில் டச் ஸ்கிரீன் வைக்க வேண்டும் என்று ஐடியா வந்ததற்கு ஸ்கோடாவுக்கு ‘குடோஸ்’ சொல்லலாம். மற்றபடி, எக்யூப்மென்ட் விஷயங்களில் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், எலெக்ட்ரானிக் ஃபோல்டிங் விங் மிரர்ஸ் போன்றவை ரேபிட்டின் கெத்தைக் கூட்டுகின்றன. சில குட்டிக் குட்டி விஷயங்களில் ஸ்கோடா எப்போதாவது ‘வெல்டன்’ சொல்ல வைக்கும். இந்த ரேபிட்டிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. இதற்குப் பெயர் ‘கார்டு ஹோல்டர் க்ளிப்’. சென்டர் கன்ஸோலுக்கு நடுவில் இருக்கும் இதில் முக்கியமான டாக்குமென்ட்டுகள், டோல்கேட் டிக்கெட்டுகள் போன்றவற்றை க்ளிப் செய்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick