அன்பு வணக்கம் !

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ங்கிக் கடன் மூலமாகவே பெரும்பாலான கார், பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கூடவே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ரொக்கத்துக்கும் இவை விற்பனையாகின்றன. அதனால், ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற அறிவிப்பு, கார்-பைக் விற்பனையையும் பாதிக்கவே செய்திருக்கிறது. இந்தப் பாதிப்பு இன்னும் அழுத்தமாக உணரப்படுவது, பழைய கார் மார்க்கெட்டில்தான். ஏனெனில், இங்குதான் கணிசமான அளவுக்கு ரொக்கத்தில் பணப் பரிவர்த்தனை நடந்துவருகிறது. பழைய கார் விற்பனை பாதிக்கப்பட்டால், புதிய கார் விற்பனையும் பாதிக்கப்படும் என்பது உண்மையே.  காரணம், புதிய காருக்கான முன்பணத்தை, பழைய காரை விற்பனை செய்வதால் கிடைப்பதைக்கொண்டுதான் பலரும் செலுத்துகிறார்கள். பிரதமர் சொல்வதைப்போல, டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிட்டால்... பிறக்கப்போகும் ஆண்டு நிச்சயம் பிரச்னை இல்லாத ஆண்டாக இருக்கும். எதிர்க்கட்சிகள் சொல்வதைப்போல, நோட்டுக்கான தட்டுப்பாடு டிசம்பரைத் தாண்டியும் நீடித்தால்... இந்தப் புதிய சவாலைச் சந்திக்க, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிதி நிறுவனங்களோடு இணைந்து, பிரச்னையை வாய்ப்பாக மாற்ற பல புதிய திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம்.

பிராண்ட் நியூ, ஃபேஸ்லிஃப்ட், வேரியன்ட் என்று நாம் கடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில் மட்டும், அறுபதுக்கும் மேற்பட்ட கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. நிச்சயம் இது ஒரு சாதனை. இதேபோல, பிறக்கப்போகும் 2017-ம் ஆண்டில் எத்தனை புதிய கார்கள் அறிமுகமாக இருக்கின்றன என்பதைக் கணக்கெடுத்தால், அதுவும் அறுபதைத் தாண்டுகிறது. இதில் வெகுவாக எதிர்பார்க்கப்படும் 25 கார்களை மட்டும் தேர்ந்தெடுத்து, இந்த இதழில் ஒரு முன்னோட்டம் கொடுத்திருக்கிறோம்.  புத்தாண்டில் புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, ‘காத்திருந்து கார் வாங்கலாமா அல்லது விற்பனையில் இருக்கும் காரையே உடனடியாக வாங்கிவிடலாமா’ என்று முடிவெடுக்க, இந்தக் கட்டுரை உதவும்.

‘இந்த ஆண்டின் சிறந்த கார், பைக் எது’ என்பதைத் தீர்மானிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறோம். இந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்ட ஆட்டோமொபைல் வல்லுநர்கள், ஆலோசகர்களோடு இணைந்து ‘மோட்டார் விகடன்’ ஆசிரியர் குழு இந்த ஆண்டின் சிறந்த கார் மற்றும் பைக்கைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த நேரத்தில் உங்களது உதவியும் எங்களுக்கு முக்கியம். அதனால், இந்த இதழுடன் ‘சிறந்த கார்/பைக் எது’ என்ற உங்களின் சாய்ஸைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம். இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில், மறக்காமல் உங்கள் சாய்ஸ் எது என்பதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். விகடன் வலைதளம் வாயிலாகவும் உங்களது தேர்வைப் பதிவுசெய்ய முடியும்.

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick