ரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110

சிட்டிக்கு ஸ்மார்ட்!தமிழ் / படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ஹாய், நான் சிவராம். சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். சென்னையில் பயன்படுத்துவதற்கு சுஸூகி ஜிக்ஸர் வைத்திருக்கிறேன். வாரம் ஒரு தடவை எனது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஊரில் ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்ப்ளெண்டர் 125 சிசி பைக்கைப் பயன்படுத்தி வந்தேன். 10 ஆண்டுகளாக அந்த பைக் என்னை மயக்கியே வைத்திருந்தது. ஒரு லட்சம் கி.மீ -யைத் தாண்டிவிட்டது. திரும்பவும் சூப்பர் ஸ்ப்ளெண்டருக்கே போகலாமா அல்லது கிளாமருக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், மோ.வி.யில் ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக் பற்றிய டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் வந்திருந்தது.

பைக்கின் ரெவ்யூ படித்தவுடன் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன். ஆனால், ‘நீ ஏற்கெனவே வைத்திருந்தது 125 சிசி; இது 110தான்’ என்று நண்பர்களிடம் இருந்து விமர்சனம் வந்தது. ‘பரவாயில்லை; பைக் நல்லாவும் இருக்கு; நானும் இங்கே ஓட்டிக்கிறேன்’ என்று அப்பாவும் ஓகே சொன்னார்.

ஷோரூம் அனுபவம்

நான் பைக் வாங்கியது என்னவோ, எனது ஊரில்தான். ஆனால், நான் ஐ-ஸ்மார்ட்டை டெஸ்ட் செய்தது சென்னை மயிலாப்பூரில். ‘பைக் வருவதற்கு இன்னும் 20 நாட்களாகும்’ என்று கோவையில் உள்ள எல்லா ஷோரூம்களிலும் ஒரே பதிலைச் சொன்னார்கள். நான் அவசரம் பொறுக்காமல், சென்னையிலேயே பைக்கை டெஸ்ட் செய்துவிட்டேன். பைக் ஓட்டியதும் எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சென்னையிலும்  பைக் வரவில்லை என்றார்கள். இரண்டு கலர்கள்தான் இருந்தன. ப்ளூ கலர்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். அதன் மேல்தான் கண் வைத்திருந்தேன். திடீரென ஒருநாள் சூலூரில் பைக் வந்திருப்பதாக எனது ஸ்பை நண்பர்கள் மூலம் தகவல் வந்தது. சூலூர் ராஜ் மோட்டார்ஸ் ஷோரூமில் எனக்குப் பிடித்த ப்ளூ கலரில் நின்றிருந்தது ஐ-ஸ்மார்ட். அப்படியே அமுக்கிவிட்டேன். ஆன்ரோடு  விலையாக எல்லாம் சேர்ந்து 63,500 ரூபாய் ஆனது. ஒரு சர்வீஸ் முடிந்திருக்கிறது. 1,650 கி.மீ ஓடியிருக்கிறது. பைக்கை வாங்கியவுடன் அவிநாசி கோயிலுக்குச் சென்றேன். என் அப்பாவுக்கும் இது மிகவும் பிடித்திருக்கிறது. இப்போது வார இறுதியில் நானும், வார நாட்களில் அப்பாவும் பைக்கை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். நாங்க ரொம்ப மகிழ்ச்சி!

பிடித்தது

எனக்கு மட்டுமில்லை; எல்லோருக்குமே ஐ-ஸ்மார்ட் பைக்கில் பிடித்த அம்சம் - ஸ்டார்ட்/ஸ்டாப் டெக்னாலஜிதான். சிக்னலில் நியூட்ரலில் 5 விநாடிகள் நின்றால், தானாகவே பைக் ஆஃப் ஆகிவிடுகிறது. திரும்பவும் கிளட்ச்சைப் பிடித்தவுடன், பைக் இன்ஜின் ஆன் ஆகிவிடும். முதலில் இது அப்பாவுக்குக் குழப்பமாக இருந்தது. போகப் போக இப்போது பழகிவிட்டது. இந்த சிஸ்டம் வேண்டாம் என்றால், அதற்கான சுவிட்ச் வலதுபுறம் இருக்கிறது. இதை ஆஃப் செய்துவிட்டால், ஸ்டார்ட்/ஸ்டாப் ஒர்க் ஆகாது. சென்னையில் ஜிக்ஸர் ஓட்டும்போது திடீரென நானே குழம்பி விடுகிறேன். உண்மையில் இதற்காகவே ஐ-ஸ்மார்ட் பைக்கை ரொம்பப் பிடிக்கிறது. 110 சிசி பைக்கில் எனக்குத் தெரிந்து நீளமான சீட் கொண்ட பைக் இதுதான். சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கைவிட சீட் அகலமாகவும், நீளமாகவும் இருக்கிறது. எனவே, உட்கார்வதற்கு கம்ஃபர்டபிளாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick