இன்ஷூரன்ஸ் எப்படிப் பெற வேண்டும்? | How to Claim for Car Insurance? - Motor Vikatan | மோட்டார் விகடன்

இன்ஷூரன்ஸ் எப்படிப் பெற வேண்டும்?

சோ.கார்த்திகேயன், படங்கள் : ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

மிழ்நாட்டில் பெய்த கன மழையில் சென்னை உட்பட பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தன. வெள்ளத்தில் சிக்கிய கார், பைக்குகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஆர்.திருமலை, வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர்:

‘‘தகவல் கொடுக்க வேண்டும்: மழை வெள்ளத்தில் கார் அல்லது பைக் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால், உங்களின் வாகன எண் மற்றும் பாலிஸி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு,  இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு இ-மெயில் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

போட்டோ முக்கியம்: கூடவே பாதிக்கப்பட்ட வாகனத்தையும் போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால், அதன்மூலம்கூட போட்டோ எடுத்து அனுப்பலாம்.
இன்ஜினை ஸ்டார்ட் செய்யக் கூடாது: மழை நீரில் பாதிப்படைந்த பைக்கை அல்லது காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால், இழப்பீடு தரமாட்டார்கள். ஏனெனில், இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் இழப்பீட்டைப் பொறுத்தவரை, அவர்களுக்கு முதல் மூலக்காரணம் எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்தால், அது திட்டமிட்ட செயலாக மாறிவிடுகிறது.

இடம் முக்கியமில்லை: இழப்பீட்டைப் பொறுத்தவரை, வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனம் - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் மீது மரம், மின் கம்பம் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும். வேறு ஏதாவது ஓர் இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மழை அல்லது வெள்ளத்தால் பாதிப்படைந்து இருந்தாலும் இழப்பீடு கிடைக்கும்.

சர்வேயர் வருவார்: இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் ஸ்பாட் போட்டோ மற்றும் பாதிப்பை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் வாகனத்தின் தேய்மானத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.

டோயிங் சார்ஜும் கிடைக்கும்: இன்ஷூரன்ஸ் இழப்பீட்டில் டோயிங் சார்ஜும் கிடைக்கும். அதாவது, பாதிப்படைந்த வாகனத்தை, பணிமனைக்கு எடுத்துச் செல்வதற்கான செலவும் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டில் கிடைக்கும்.’’

தொடர்ந்து பெய்த மழையினால், தகவல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் காலதாமதமாகத்தான் தகவல் சொல்ல முடியும். அப்போது என்ன நடைமுறை?
வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் சொல்கிறார்: 

 “சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் 2, 3 நாட்களாக மின்சாரம் இல்லை; செல்போன் சிக்னலும் இல்லை; இன்டர்நெட்டும் இல்லை. இது போன்ற சமயங்களில் பாதிப்பில் இருந்து வெளியேறிய பின்பு, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகுகூட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தலாம். இதை பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை இழப்பீட்டை நிராகரிக்கவே முயற்சி செய்வார்கள். அதனால், கவனமாக இருப்பது நல்லது.

இழப்பீடு தர மறுத்தால்? இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தர மறுத்தால், இன்ஷூரன்ஸ் குறை தீர்ப்பாளர், கோர்ட் அல்லது கன்ஸ்யூமர் கோர்ட்டில் முறையிடலாம். இன்ஷூரன்ஸ் குறை தீர்ப்பாளர்கள் இழப்பீடு கிடையாது என்று உத்தரவிட்டால், கோர்ட்டில் முறையிடலாம்.  கோர்ட் தீர்ப்பே இறுதியானது. கோர்ட்டில் இழப்பீடு கிடையாது என்று சொன்னால், இன்ஷூரன்ஸ் குறை தீர்ப்பாளர்களிடம் முறையிட முடியாது!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick