நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

பண்டரிபுரம் ரயில்வே கேட்!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

காஷ்மீர்ப் பயணத்தின் முதல்நாள். சேலத்தில் இருந்து லாரி கிளம்பியபோது, இது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று மலைப்பு ஏற்பட்டது. ஆனால், லாரி டிரைவர்களுக்கு இது சகஜம். ஒரு மாதம் வரை பயணத்திலேயே இருப்பவர்கள் ஏராளம். டிரைவர் மணிக்கும் பரமேஸ்வரனுக்கும் இதுபோன்ற பயணங்கள் சாதாரணம். ஆனால், எனக்கும் புகைப்படக்காரர் ரமேஷுக்கும்தான் காஷ்மீர் புதிது. பனி மலைகளை காணப்போகும் ஆர்வம் எங்களிடம் இருந்தது. அதேசமயம், அந்த மலைச் சாலையின் பள்ளத்தாக்குகள் நெஞ்சுக்குள் புகுந்த கல் போல உறுத்தியது.

கிருஷ்ணகிரி நோக்கி லாரி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. ஆக்ட்டிங் டிரைவரான பரமேஸ்வரனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘‘21 ஆண்டுகளாக டிரைவராக இருக்கிறீர்களே... சொந்தமாக வண்டி வாங்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?’’ என்ற என் கேள்விக்கு முதலில் ஒரு சத்தமான சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தவர், ‘‘நானும் இடையில கொஞ்ச காலம் அப்படித்தான் நெனைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப இருக்கிற ஓனருங்க நிலைமைய நெனைச்சா... நல்லவேளை நாம தப்பிச்சோம்னு இருக்கு.

சாப்பிடாம, நல்ல துணிமணி உடுத்தாம, குருவி சேர்க்கிறது மாதிரி காசை மிச்சம் பிடிச்சு, அட்வான்ஸ் பணம் கட்டி கடனுக்கு லாரி வாங்கினா, ஒவ்வொரு மாசமும் தவணை கட்டுறதுக்குள்ள கண்ணு முழி பிதுங்கிப்போகுது. ஏண்டா லாரி வாங்கினோம்... பேசாம டிரைவராவே இருந்திருக்கலாம்னு தோணும். என்னோட கூட்டாளிங்க பலபேரு லாரி வாங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. லாரித் தொழில்ல காசு மிச்சம் பண்ணுன காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இப்போ தவணையாவது கட்ட முடியுமானு பார்க்கிற காலம். நான் டிரைவரா மட்டும்தான் இருக்கேன்; சந்தோஷமா இருக்கேன். பல லாரி ஓனருங்க தூங்க முடியாம இருக்காங்க!’’ என்றார். ‘‘திருமணம் ஆகிவிட்டதா?’' என்ற கேள்விக்கு  பரமேஸ்வரன் இன்னும் சத்தம்போட்டுச் சிரிக்க, மணியும் அவருடன் சேர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick