அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

மோட்டார் விகடன் 2016 விருதுகளைத் தேர்ந்தெடுக்க புதியது, ஃபேஸ்லிஃப்ட், மறு அறிமுகம் என வேறுபாடு பார்க்காமல், கடந்த 12 மாதங்களில் அறிமுகமான கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை லிஸ்ட் எடுத்தோம். வாடிக்கையாளர்கள், தங்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்றதைத் தேர்ந்தெடுக்க, சாய்ஸ் கூடிக்கொண்டே போவது மகிழ்ச்சியான விஷயம். விருதுகளுக்காக சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது, இந்த ஆண்டு கூடுதல் சவாலாக இருந்தது. ஆனால், இது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான சவால்.

டாடா போல்ட், ரெனோ லாஜி, ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர், மாருதி சுஸூகி செலெரியோ டீசல், ஹோண்டா ஜாஸ், மஹிந்திரா TUV300, ஃபோர்டு ஃபிகோ, ரெனோ க்விட், ஃபியட் புன்ட்டோ ஈவோ அபார்த், ஃபியட் அவென்ச்சுரா அபார்த், மாருதி சுஸூகி S-க்ராஸ், மாருதி சுஸூகி பெலினோ எனப் பல புதிய கார்கள் படையெடுத்துவந்தன.

ஹோண்டா யூனிகார்ன் 160, பஜாஜ் பிளாட்டினா 100ES, சுஸூகி ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்ஸர் RS200, யமஹா சல்யூட்டோ, பஜாஜ் பல்ஸர் AS200, பஜாஜ் பல்ஸர் AS150, ஹோண்டா லிவோ, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150, பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220, மஹிந்திரா மோஜோ என்று பைக்குகளின் அறிமுகமும் அழகான அணிவகுப்புபோல நடந்தேறியது.

மோட்டார் விகடன் தொடர்ந்து கடைப்பிடித்துவரும் எடைக் கற்கள் - விலைக்கேற்ற மதிப்பு, சுற்றுச்சூழலோடு இயைந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள், புதுமையான வடிவமைப்பு, நல்ல மைலேஜ், செயல்திறன், சிறந்த கையாளுமை, அசதி தராத சஸ்பென்ஷன், நம்பிக்கை தரும் பிரேக்கிங், ஸ்மூத்தாக இயங்கும் கியர்பாக்ஸ்  ஆகியவற்றைக்கொண்டே எது இந்த ஆண்டின் சிறந்த கார், பைக், ஸ்கூட்டர் என்பதை நமது நிபுணர்கள் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பெருமளவில் வாக்குகளைச் செலுத்தி, மோட்டார் விகடன் விருதுகள் வைபவத்தில் கலந்துகொண்டீர்கள்.

தொழில்நுட்பத்தில் சிறந்த கார், சிறந்த பெர்ஃபாமென்ஸ் கார், சிறந்த பெர்ஃபாமென்ஸ் பைக் என மேலும் பல புதிய விருதுகளுக்கான தகுதியானவற்றை இந்த ஆண்டு தேர்ந்தெடுத்திருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் வாங்கப்போகும் புதிய கார் அல்லது பைக்கைத் தேர்ந்தெடுக்க, இந்த விருதுகள் மிக உதவியாக இருக்கும். அதேபோல், இந்த இதழுடன் இணைப்பாக வந்திருக்கும் ‘கார் உங்கள் சாய்ஸ்’ உங்கள் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற காரைத் தேர்வுசெய்ய கைகொடுக்கும். 

மோட்டார் விகடன் பத்தாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick