பழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா? | Tips to keep in mind about vehicles in used car market - Motor Vikatan | மோட்டார் விகடன்

பழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

டிப்ஸ்: பழைய கார் மார்க்கெட் ராகுல் சிவகுரு, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

மிடில் கிளாஸ் மக்களின் கனவுப் பட்டியலில், கார் நிச்சயம் இருக்கும்.  ஆசைப்பட்டால் மட்டும் போதாது; நமக்கான சரியான கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இது பழைய கார் வாங்கும்போதும் பொருந்தும். பழைய கார் சந்தையில் என்னென்ன கவனிக்க வேண்டும்? டீசலா, பெட்ரோலா... எப்படித் தேர்ந்தெடுப்பது..?

முதன்முதலாக கார் ஓட்டப் பழகுகிறவர்கள்; முதன்முதலாக கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குறைவான பட்ஜெட்; ஆனால், பெரிய கார் வேண்டும் என்பவர்களுக்கான களமாக முன்பு இருந்தது, பழைய கார் மார்க்கெட். ஆனால் இப்போது, சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்திக் காட்ட உதவுவது கார்தான். டூ-வீலர் வைத்திருந்தவர் ஹேட்ச்பேக் காருக்கும், ஹேட்ச்பேக் வைத்திருந்தவர் செடானுக்கும், செடான் வைத்திருந்தவர் எஸ்யுவிக்கும் மாறுவதற்கும் துணை நிற்பது பழைய கார்கள்தான். ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பழைய கார் மார்க்கெட், சமீபத்திய மழை வெள்ளத்தால் சற்று பின்னடைவைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?

பழைய கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிலரைச் சந்தித்தோம். அனைவரும் ஒரே குரலில் சொன்ன வார்த்தை ‘ஆம்’ என்பதுதான். ஆனால், மழை வெள்ளத்துக்குப் பிறகு 6 மாதங்கள் ஆன நிலையில், பழைய கார் மார்க்கெட் சற்று மீண்டு வரத் தொடங்கியிருப்பதாகவும் நம்பிக்கையுடன் சொன்னார்கள்.

“பெட்ரோல்- - டீசல் இடையேயான விலை வித்தியாசத்தால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெட்ரோல் கார்களின் ஸ்மூத்னெஸ் பிடித்தவர்கள், தொடர்ச்சியாக அதையே வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். டீசல் கார்களில் மைலேஜ் அதிகம் என்பதால், அவை டிமாண்டாகவே இருக்கின்றன. ஆனால், மாதத்துக்கு சராசரியாக 1,500 -  2,000 கி.மீ அதனைப் பயன்படுத்தாவிட்டால் நஷ்டம்தான். ஏனெனில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் பராமரிப்புச் செலவு மற்றும் விலை அதிகம். அது புரியாமல் பலர் டீசல் கார்களை வாங்கி அவதிப்படுகிறார்கள்’’ என்கிறார் ஜெயின்ஸ் கார் ஷாப்பைச் சேர்ந்த ஆர்.இளங்கோ.

ஆன்லைனில் பழைய கார் விற்பனை, கார் நிறுவனங்களே பழைய கார் விற்பனை செய்வது; கடனில் பழைய கார் வாங்குவது பற்றிக் கேட்டபோது, ‘‘ஆன்லைன் கார் விற்பனை மூலமாக போட்டி அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நேரில் காரைப் பார்த்து வாங்கும் அனுபவம் ஆன்லைனில் கிடைக்காது. கார் தயாரிப்பு நிறுவனங்களே பழைய கார் ஷோரூம்களை நடத்தினாலும், அவர்கள் காரின் விலையைக் குறைவாகத்தான் மதிப்பீடு செய்கிறார்கள். இதற்கு ஒரு அளவுகோல் வைத்து விலைகளை அவர்கள் நிர்ணயிப்பதே காரணம். ஆனால், நாங்கள் எங்கள் அனுபவம் காரணமாக, சரியான விலையைச் சொல்லிவிடுவோம். பழைய கார்களை 75 சதவிகிதம் மக்கள் ஃபைனான்ஸ் முறையில் தான் வாங்குகிறார்கள்!’’ எனத் தெளிவுபடுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick