எந்திரன் - 18

TURBO CHARGERதொடர் / தொழில்நுட்பம்பரணிராஜன்

சூப்பர் சார்ஜரில் கம்ப்ரஸரை இயக்கத் தேவையான சக்தி, இன்ஜினில் இருந்தே பெறப்படுவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை, சூப்பர் சார்ஜரே ஈடுகட்டும். அடிப்படையில் டர்போ சார்ஜரும் சூப்பர் சார்ஜரின் வேலையைத்தான் செய்கிறது. ஆனால், வேலை செய்வதற்குத் தேவையான உள்ளீடு சக்தியைப் பெறும் விதத்தில்தான் இவை இரண்டும் வேறுபடுகின்றன. சொல்லப்போனால், டர்போ சார்ஜரை ஆரம்பத்தில் டர்போ சூப்பர் சார்ஜர் (Turbo Super Charger) எனக் குறிப்பிட்டு வந்தனர். காலப்போக்கில் டர்போ சார்ஜராக மாறிவிட்டது.

டர்போ சார்ஜர், இன்ஜினின் எக்ஸாஸ்ட் மேனிஃபோல்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். டர்போ சார்ஜரில் முக்கியமான பாகங்களாக, ஒரு டர்பைன் மற்றும் கம்ப்ரஸர் இருக்கும். இந்த டர்பைன் என்பது, ஒரு ஷாஃப்ட்டின் மேல் வரிசையாக பிளேடுகள் பொருத்தப்பட்ட ஒரு அமைப்பு. இவை எடை குறைந்த, நீடித்து உழைக்கக்கூடிய செராமிக் பொருட்களால் தயாரிக்கப்பட்டது. எடை குறைவாக இருப்பதால், பிளேடுகள் வேகமாகச் சுழலும்.

இன்ஜினின் தொடர்ச்சி யான இயக்கத்தால் வெளி வரும் வாயுக்கள் (Exhaust Gases) இந்த டர்போ சார்ஜருக்குள் நுழைந்து, இந்த டர்பைன் பிளேடுகளை வேகமாகச் சுழற்றும். அதிகப்படியான வாயுக்கள் வெளியேறினால், டர்பைன் சுழற்சியும் வேகமாக இருக்கும். டர்பைன் சுழல்வதால், மையத்தில் இருக்கும் ஷாஃப்ட்டின் மறுமுனையில் இணைக்கப் பட்டிருக்கும் கம்ப்ரஸரும் சேர்ந்து சுழல்கிறது. இந்த கம்ப்ரஸர், ஏர்ஃபில்டருக்கும் இன்டேக் மேனிஃபோல்டுக்கும் (Intake manifold) நடுவில் அமைந்திருக்கும். கம்ப்ரஸர், சென்ட்ரிஃப்யூகல் பம்ப் போல (Centrifugal Pump) இயங்கும். இந்த கம்ப்ரஸர் சுழல்வதால், இதன் வழியாக உள்ளே நுழையும் வெளிக்காற்று, அழுத்தப்படுகிறது. அது, இன்ஜின் இன்லெட் மேனிஃபோல்டுக்குள் செலுத்தப்படுகிறது. அதிகப்படியான காற்று உள்ளிழுக்கப்படுவதால், இன்னும் அதிகமாக எரிபொருள் இழுக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால், இன்ஜினின் திருப்புத்திறன் மற்றும் ஆற்றல் 50 சதவிகிதம் வரை மேம்படும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், வெளியேறும் வாயுக்களால் சுழலும் டர்பைன் இயக்கம் தவிர்த்து, இவற்றின் செயல்பாடுகள் சூப்பர் சார்ஜரைப்போலவேதான் இருக்கும். சராசரியாக 1,50,000 சுற்றுக்கள் சுழலும் இந்த டர்பைன். இது, சராசரி இன்ஜினின் இயக்கத்தைவிட 30 மடங்கு அதிகம். இந்த அதிகப்படியான சுழற்சியைத் தாங்கும் அளவுக்கு, டர்பைன் ஷாஃப்ட்டின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick