V15 - எப்படி இருக்கிறது? - ஸ்டூடன்ட்ஸ் ரிப்போர்ட்

ரீடர்ஸ் ரிப்போர்ட் / பஜாஜ் V15ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

ஐ.என்.எஸ் விக்ராந்த், இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கெடுத்த விமானம் தாங்கிக் கப்பல். 1997-ல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற இந்தக் கப்பல், 2014-ல் ஸ்கிராப் யார்டுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பலின் இரும்பைக்கொண்டு, பஜாஜின் புதிய V15 பைக்கின் சில பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தனித்துத் தெரியும் டிஸைன் அம்சங்களைக்கொண்டுள்ள V15 எப்படி இருக்கிறது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், நான்காம் ஆண்டு எம்.எஸ்ஸி., எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் மாணவர்கள், V15 பைக்கை ஓட்டிப் பார்த்துவிட்டு அனுபவத்தைச் சொல்கிறார்கள்.

கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இல்லை!

பாலகிருஷ்ணன்

பயன்படுத்தும் வாகனம்: ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்

எனது ட்விஸ்ட்டர் பைக்குடன் ஒப்பிடும்போது, V15 பைக்கின் டிஸைன் கிளாஸிக். சீட்டிங் பொசிஷன் மற்றும் இருக்கை சொகுசாக இருக்கிறது. V15 ஒரு 150சிசி பைக் என்பதை, டெக்னிக்கல் விவரங்களைப் பார்த்தால்தான் தெரிகிறது. ஏனெனில், தினசரிப் பயன்பாட்டுக்கான கம்யூட்டர் பைக் போலத்தான் இதன் பெர்ஃபாமென்ஸ் இருக்கிறது. மேலும் V15-ன் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இல்லை என்பதுடன், கியர் மாற்றும் விதமும் வசதியாக இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, V15 பைக்கின் விலை சற்று அதிகம்தான்.

பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கிறது!

ஷோபனா ராஜன்

பயன்படுத்தும் வாகனம்: ஹீரோ பேஸன் ப்ரோ

சாலையில் செல்லும் பலரையும் திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கிறது V15 டிஸைன். சீட்டிங் பொசிஷன் மற்றும் இருக்கைகள் வசதியாக இருக்கின்றன. பின்பக்க கவுலை அகற்றினால், 2 பேர் உட்காரக்கூடிய பைக்காக மாறிவிடுவது சூப்பர் ஐடியா. எனது பேஸன் ப்ரோ பைக்குடன் ஒப்பிடும்போது, V15 பைக்கின் பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கிறது. நான் புதிதாக பைக் வாங்குவதாக இருந்தால், V15 எனது பரீசீலனைப் பட்டியலில் இருக்கும். ஆனால், விலை சற்று குறைவாக இருந்திருக்கலாம்.

எடை அதிகம்; கையாள கஷ்டம்!

ராஜசேகர்

பயன்படுத்தும் வாகனம்: பஜாஜ் டிஸ்கவர் 100

எந்த மாதிரியும் இல்லாமல் புதுமையாக இருக்கும் V15 பைக்கின் டிஸைன், பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். இருக்கைகளின் சொகுசுத்தன்மை அருமை. எனது டிஸ்கவருடன் ஒப்பிடும்போது, V15-ன் எடை அதிகம் என்பதால், கையாள சற்றுக் கடினமாக இருக்கிறது. இதன் பெர்ஃபாமென்ஸும் 150சிசி பைக்குக்கு ஏற்ப இல்லை. நான் மற்றொரு பஜாஜ் தயாரிப்பை வாங்குவதாக இருந்தால், அது கண்டிப்பாக பல்ஸர் போன்ற பவர்ஃபுல் பைக்காகத்தான் இருக்கும்.

அகலமான டயர்கள் பெஸ்ட்!

அஜய்குமார்

பயன்படுத்தும் வாகனம்: ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்

அட்டகாசமான டிஸைனைக் கொண்டிருக்கிறது V15. இருக்கை மற்றும் சீட்டிங் பொசிஷன் வாட்டமாக இருக்கிறது. V15-ல் இருக்கும் 150சிசி இன்ஜின், போதுமான டார்க்கை வெளிப்படுத்துவதால், நெரிசல் மிக்க நகரச் சாலைகளில் பைக்கை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. மேலும் ட்விஸ்ட்டருடன் ஒப்பிட்டால், V15 அகலமான டயர்களைக்கொண்டிருப்பது ப்ளஸ். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்தாலும், கியர் மாற்றும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை.

பெர்ஃபாமென்ஸ் சுமார்தான்!

கிருஷ்ணமூர்த்தி

பயன்படுத்தும் வாகனம்: யமஹா R15 வெர்ஷன் 2.0

க்ரூஸர் பாதி, கஃபே ரேஸர் மீதி எனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் V15 பைக்கின் டிஸைன் அற்புதம். அகலமான டயர்கள், பைக்கின் தோற்றத்துடன் பொருந்துகின்றன. சொகுசான இருக்கைகள் இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக V15 இருக்கும். இது ஒரு 150சிசி பைக் என்றாலும், அதற்கேற்ற பெர்ஃபாமென்ஸ் இல்லை. மேலும் பிரேக்குகளின் திறன் போதுமான அளவில்தான் இருக்கிறது. எனவே, பின்பக்க டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாகவாவது கொடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick