அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

கார், பைக், ட்ரக் என 70 வாகனங்கள் வரை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், அதிரடியாக 108 வாகனங்கள் அறிமுகமாகி, அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது. ஃபோர்டு மஸ்டாங், செவர்லே கமாரோ, ஜீப் நிறுவனத்தின் ரேங்க்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி அறிமுகங்களைக் காண ஒருபக்கம் கூட்டம் முட்டி மோதியது. இன்னொரு பக்கம், மாருதியின் காம்ப்பேக்ட் எஸ்யுவியான விட்டாரா பிரெஸ்ஸா, கான்செப்ட் எஸ்யுவியான இக்னிஸ், டொயோட்டாவின் இனோவா க்ரிஸ்ட்டா, டாடாவின் நெக்ஸான், எஸ்யுவியான ஹெக்ஸா, செடான் காரான கைட்-5 போன்ற கார்களை, செக் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். சொகுசு கார்களான ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற அரங்கங்கள் தனியாக இன்னொரு கூட்டத்தைக் கூட்டியிருந்தன.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதன் தாக்கம், உள்ளூர் எரிபொருள் விலையில் ஓரளவு பிரதிபலிப்பதால், கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து நல்லபடியாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில், புதிய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறார்கள் கார் உற்பத்தியாளர்கள். இது, ஆட்டோ எக்ஸ்போவில் வெளிப்படையாகத் தெரிந்தது. புதிய புதிய மாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருந்தால்தான், தங்களின் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். அதனால், வரவிருக்கும் காலங்களில் வாடிக்கையாளர்களின் கைதான் ஓங்கப்போகிறது என்பதும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. டிஸ்கவுன்ட்ஸ், சலுகைகள், கூடுதலான ஆக்சஸரீஸ் என்று வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான விஷயங்கள் கிடைக்க இருக்கின்றன.

ஹோண்டா நவி, பிஎம்டபிள்யூ G310R,  ஏப்ரிலியா SR 150, பெனெல்லி டொர்னாடோ 302 போன்ற பைக்குகள், ஆட்டோ எக்ஸ்போவுக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. மார்க்கெட் கணிப்பைப் பொறுத்தவரை, மோட்டார் சைக்கிள்களின் விற்பனை இந்த ஆண்டு ஏற்ற-இறக்கம் இல்லாமல்தான் இருக்கும். என்றாலும், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான டிமாண்டும் 9 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

ஆக, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த ஆண்டு ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாகவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick