ஹமாரா பஜாஜ்!

கிளாஸிக் பைக்: பஜாஜ் M80பா.அபிரக் ஷன் , படங்கள்: தே.அசோக் குமார்

“கரடுமுரடுப் பாதையிலே, செம்ம பைக்கு... செம்ம பைக்கு” எனும் விளம்பரப் பாடலைக் கேட்டவர்களுக்கு, பஜாஜ் M80 ஸ்கூட்டரை மறக்க முடியாது. ஒரு காலத்தில் ‘லோடு வண்டி’ என அழைக்கப்பட்ட இது, இப்போது ‘ஓல்டு வண்டி’யாக மாறிவிட்டது. ஆனாலும் M80 உரிமையாளர்கள், அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அக்கறையும் குறையவே இல்லை.

1981-ம் ஆண்டு பஜாஜ் முதலில் அறிமுகம் செய்த ஸ்கூட்டர் M50. இது 50 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜினைக்கொண்டது.அப்போது பரபரப்பாக விற்பனையான டிவிஎஸ்50 மொபெட்டுக்குப் போட்டியாகக் கருதப்பட்ட பஜாஜ் M50, அதுவரை பார்த்திராத புதுவகை டிஸைனுடன் இருந்தது. ஏனென்றால் இது மொபெட், ஸ்கூட்டர், ஸ்கூட்டரெட், பைக் என எந்த வகைக்குள்ளும் வராத ஸ்டெப்த்ரூ வாகனமாக இருந்தது. ஆனால், ‘இதன் சக்தி போதவில்லை’ என்ற வாடிக்கையாளர்களின் குறையைப் போக்க, 1986-ம் ஆண்டுவாக்கில் M80 எனும் 75 சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதாவது, M80 வாகனத்தின் டிஸைன் ஹோண்டாவின் பிரபல மாடலான ‘கப்’ எனும் வாகனத்தின் டிஸைனை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் சக்தியுடன் வந்த M80, டூவீலர் மார்க்கெட்டில் பட்டையைக் கிளப்பியது. பட்டிதொட்டி எங்கும் பறக்கும் வாகனமாக றெக்கை கட்டியது.

மாசுக் கட்டுப்பாடு அளவுகள் நம்நாட்டில் அமல்படுத்தப்பட்டபோது, 2 ஸ்ட்ரோக் வாகனங்களின் தயாரிப்பைக் கைவிட வேண்டி வந்தது. அதேசமயம், M80 மாடலைக் கைவிடாமல் 4 ஸ்ட்ரோக் இன்ஜின்கொண்ட M80 வாகனத்தை பஜாஜ் அறிமுகம் செய்தது. ஆனால், 2 ஸ்ட்ரோக் வாகனத்துக்கு இருந்த பல சாதகமான அம்சங்கள் இதில் இல்லை என்பதால், மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை. இன்றைக்கும் லோடு வண்டியாக சாலையில் காணும் M80 ஸ்கூட்டருக்கு, சந்தையில் மதிப்பு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick