“பயணத்துக்கு உயிரையே பணயம் வைப்பேன்!” | Coimbatore Bike Tourist Rafeeq Sakkariya Ahmed interview - Motor Vikatan | மோட்டார் விகடன்

“பயணத்துக்கு உயிரையே பணயம் வைப்பேன்!”

கே.கணேசன், தி.விஜய்

ரஃபீக் சக்காரியா முகமது எனும் ஜ்யூஸ் (juze) - கோவையைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரபரப்பான ஐடி புரொஃபஷனல். மன அழுத்தம் தரும் வேலையில் இருந்து ரிலாக்ஸ் செய்துகொள்ள, அடிக்கடி லீவு போட்டுவிட்டு இயற்கையை ரசிக்க காடு, மலை என பைக்கில் கிளம்பியவர், பின்பு அதையே வேலையாகவும் மாற்றிக்கொண்டார். இப்போது இவரது முழு நேரப் பணி, பைக் டூரிஸ்ட் ஆர்கனைஸர்.

மனிதக் காலடித்தடம் படாத புதிய இடங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும், அங்கு செல்ல ஆர்வமாக இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவதுமாக, ரசனையாக வாழ்கிறார் ஜ்யூஸ்.
 
‘‘ஐடி வேலையில் மாதாந்திர டார்கெட் என்னை எதையும் ரசிக்க அனுமதிக்கவில்லை. யோசித்துப் பார்த்தேன்; மனதுக்குப் பிடித்ததைச் செய்வதுதான் நல்ல வேலையாக இருக்கும். அது குறைவான வருமானம் தந்தாலும் பரவாயில்லை என முடிவுசெய்தேன்” என்றவர், பைக் டூர் ஆர்கனைஸராக மாறிய கதையைச் சொன்னார்.

‘‘25 ஆண்டுகளாகப் பயணங்கள் செய்துவருகிறேன். பயணம் மட்டுமே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஒரே இடத்துக்குப் பலமுறை சென்றாலும், மக்களைச் சந்திப்பதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் திருப்தி கிடைக்கிறது. அதுவே எனக்குப் புத்துணர்ச்சி கொடுக்கிறது. முதன்முதலில் முதுமலை புலிகள் சரணாலயம் சென்றிருந்தபோது, வன விலங்குகளைப் புகைப்படங்கள் எடுத்தேன். அது எனக்குப் பெரிய சாகச உணர்வை அளித்தது. அதுதான் என் பயணங்களின் தொடக்கம்.

பொதுவாக, என் பயணங்களில் பெரிய திட்டங்கள் எதுவும் இருக்காது. தேடுதலில் இருக்கும் சந்தோஷத்தை அது கெடுத்துவிடும் என்பதால், யாரிடமும் அது பற்றி விவாதிக்க மாட்டேன். வழியில் ஏற்படும் சவால்களைச் சந்திப்பதும்; அதை அனுபவித்து அசை போட்டு எழுதுவதும் நல்ல நினைவலைகளை அளிக்கும். நிலப் பகுதிகள் மற்றும் சூழல்கள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக காடுகள் என் பயணத்தில் முன்னுரிமை பெறும். தொலைதூரம் பயணிப்பதாக இருந்தால் – காட்டின் வழி செல்வதையே நான் மிகவும் விரும்புகிறேன். பயணத்துக்காக என் உயிரையும் பணயம் வைப்பேன். பயணத்துக்குப் பெரும்பாலும் தனியாகச் செல்வதைத்தான் விரும்புவேன். ஆனால், மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு நான் வழிகாட்டியாகத் தொழில் செய்வதால், பலருடன் சேர்ந்து செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது.

‘‘உங்களுடைய குழுவை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’’

‘‘என்னோடு பயணிப்பவர்களுக்கு பயணத்தில் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும். அடுத்ததாக, பொறுமை மற்றும் உடல் நலம். அவர்கள் ஹெல்மெட், ஷூ போன்ற பாதுகாப்புச் சாதனங்களைத் தவறாமல் அணிபவராக மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் சக பயணிகளையும் விலங்குகளையும் மதிப்பவர்களாக இருக்க வேண்டும். அதிக வேகமோ அல்லது வெறித்தனமான பயணமோ கூடாது. மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. இவைதான் என் குழுவினரிடம் இருந்து நான் எதிர்பார்ப்பவை. என்னுடன் சிறிய தூரப் பயணச் சோதனையின் மூலம் அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணித்து, சரி என்று பட்டால் மட்டுமே நெடுந்தூரம் பயணிக்க அழைத்துச் செல்கிறேன்.’’

‘‘பயணங்களுக்கு ஒருவர் எப்படி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்?’’

‘‘மனதுதான் காரணம். என்னுடைய முதல் பயணம் கோவை டு மும்பை, கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டரில்தான் நடந்தது. ஆக, இது உடல் வலிமையைவிட மன வலிமையைப் பொறுத்ததாகும். உடல் வலிமையும் மிகத் தேவையான ஒன்று!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick