இந்தியாவுக்கு வரும் டெஸ்லா! - எலெக்ட்ரிக் கார்

டெஸ்லா மாடல் 3 - ஒரே நாளில் 1,15,000 புக்கிங்! ராகுல் சிவகுரு

ல நாடுகளில் பெரிய கார்களுக்கே சவால்விடும் வகையில் எலெக்ட்ரிக் கார்கள் தயாராகி, வெற்றிகரமாக விற்பனையும் ஆகின்றன. அதில் லேட்டஸ்ட் ரிலீஸ், ‘டெஸ்லா மாடல்-3.’
2017-ம் ஆண்டில்தான் டெஸ்லாவின் மாடல்-3 காரின் உற்பத்தி தொடங்கப் படுகிறது. காரின் விலை $35,000 (இந்திய மதிப்பில் 23.21 லட்ச ரூபாய்) இருக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதால், காரின் விலை இதைவிட இங்கே கூடுதலாகத்தான் இருக்கும்.

காரில் 5 பேர் அமர்ந்திருந்தாலும், 0-100 கி.மீ வேகத்தை 6 விநாடிகளுக்கும் குறைவான நேரத்திலே எட்ட முடியும் என்பதுடன், காரின் முழு சார்ஜ் செய்யப்பட்ட 65KWh லித்தியம் - ஐயான் பேட்டரிகள் வாயிலாக, 402 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்த காரின் பேட்டரிகளை விரைவில் சார்ஜ் செய்ய, மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால், திரையரங்குகள், ரயில்வே ஸ்டேஷன்  போன்ற இடங்களில் சூப்பர் சார்ஜர்கள் உடனான எனர்ஜி ஸ்டேஷன்களை அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

இரண்டு பூட் ஸ்பேஸ்கள், அதிக இடவசதி, பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோபைலட் வசதி, 15 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட் ரோல் சீட்கள், 2 வீல் டிரைவ் -
4 வீல் டிரைவ் என வசதிகளின் பட்டியல் மிக நீளம்.

டெஸ்லா மாடல்-3 காரின் புக்கிங் துவங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1.15 லட்சம் கார்கள் அதிகாரப்பூர்வமாக முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெஸ்லாவின் இணைய தளத்தில் 1,000 அமெரிக்க டாலரைச் செலுத்தி காரை புக்கிங் செய்யலாம். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வரை 3.25 லட்சம் கார்கள் புக் ஆகியிருக்கின்றன.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை எலெக்ட்ரிக் கார்கள் கொண்ட நாடாக மாற்ற,  மத்திய கனரக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த காரின் வரவை நம் நாட்டில் 2018-ல் எதிர்பார்க்கலாம்.


டெஸ்லாவுக்கு டீலர்கள் கிடையாது; போட்டியும் கிடையாது!

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங் களைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டது.

2009-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக, அமெரிக்க அரசின் எரிசக்தித் துறை அமைச்சகத்திடம் இருந்து 465 மில்லியன் டாலர் கடனாகப் பெற்றது டெஸ்லா. இதன் நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க், ‘‘2022-ம் ஆண்டுக்குள் இந்தக் கடனை அடைத்து விடுவோம்” என்ற உத்தரவாதத்தை அப்போது அளித்தார். ஆனால், 2012-ல் சிறப்பான இன்ஜினீயரிங், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகமான டெஸ்லாவின் மாடல்-S கார், வெற்றிகரமாக விற்பனையானதால், கடன் தொகையை வட்டியுடன் 2013-ம் ஆண்டிலேயே செலுத்திவிட்டார். டெஸ்லா இன்று வரை கஷ்டப்பட்டுச் சமாளித்து வரும் பிரச்னை என்ன வென்றால், அது டெஸ்லா கார்களை டீலர்கள் மூலமாக விற்க முடியாது என்பதுதான். ஆம், டெஸ்லாவின் தயாரிப்புகளை வாங்குவதற்கு, அவர்களுடைய இணைய தளம் மூலமாகத்தான் ஆர்டர் செய்ய வேண்டும். டெஸ்லா மாடல்-S காரின் தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமையை, கடந்த 2014-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. எனவே, உலகில் இருக்கும் எந்தவொரு கார் நிறுவனமும் டெஸ்லாவின் தொழில்நுட்பங்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் சீனாவைச் சேர்ந்த LeECO நிறுவனம், LeSEE என்ற பெயரில், தானியங்கி முறையில் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick