இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! | Motor News - electric bus - Motor Vikatan | மோட்டார் விகடன்

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பஸ்!

எலெக்ட்ரிக் பஸ் - சர்க்யூட்தமிழ்

‘‘இதெல்லாம் சாத்தியம் இல்லை. அப்படியே வந்தாலும் ஹெவி வெஹிக்கிள் மார்க்கெட்டில் இது எடுபடாது’’ என்று நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அசோக் லேலாண்ட் இப்போது அதை நிறைவேற்றிவிட்டது. ஆம், எலெக்ட்ரிக் பஸ் வந்துவிட்டது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பஸ் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது அசோக் லேலாண்டின் ‘சர்க்யூட்’ எனும் பஸ்.

பைக், கார், ஆட்டோவில்கூட எலெக்ட்ரிக் உண்டு. ஏனென்றால், இவையெல்லாம் 1,000 - 1,500 கிலோ எடை கொண்ட எடை குறைந்த வாகனங்கள். ஆனால், கிட்டத்தட்ட 4 டன் எடையுள்ள வாகனங்கள் எலெக்ட்ரிக் முறையில் இயங்க வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய பேட்டரியும் சக்தியும் தேவைப்படும்?

‘‘எல்லாவற்றுக்கும் எங்களிடம் விடை இருக்கிறது’’ என்கிறது அசோக் லேலாண்ட். எலெக்ட்ரிக் பஸ்களில் இரு வகை உள்ளன. ஒன்று - ஃபுல் எலெக்ட்ரிக்; மற்றொன்று - ஹைபிரிட் எலெக்ட்ரிக் பஸ். அசோக் லேலாண்டின் இந்த பஸ், ஃபுல் எலெக்ட்ரிக் வகையைச் சேர்ந்தது. அதாவது, முழுக்க முழுக்க இந்த பஸ் பேட்டரியை மட்டுமே நம்பி இயங்கும். ஹைபிரிட் என்றால் பிரச்னை இல்லை; பேட்டரி இல்லாவிட்டால்  டீசலை நிரப்பிக்கூட பயணத்தைத் தொடரலாம். ‘‘ஆனால், டீசலில் மாசுக் கட்டுப்பாட்டுக்கு கியாரன்ட்டி கிடையாது. முழுக்க முழுக்க இந்த சர்க்யூட் பஸ், எமிஷன் ஃப்ரீ வகையைச் சேர்ந்தது. பஸ், லாரி என்றாலே சாலையில் கரும்புகை கக்கும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. அதுதான் எங்களின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இப்போது அது எங்களின் சர்க்யூட் பஸ் மூலம் நிறைவேறிவிட்டது. இது எங்களின் ஜீரோ எமிஷன் செல்லம்!’’ என்றார், அசோக் லேலாண்ட் குளோபல் பஸ் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரெஸிடன்ட் வெங்கட்ராமன், .

பொதுவாக, கன ரக வாகனம் என்றால் பயண தூரம் அதிகமாக இருக்கும். அதற்காகவே இதன் பெரிய சைஸ் பேட்டரி, அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது. இதில் 3 மணி நேரம் ஃபுல் சார்ஜிங் கொடுத்தால், 120 கி.மீ வரை பயணிக்கலாமாம். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கி.மீ என்ற வகையில் இதன் சார்ஜிங் டெக்னாலஜி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. டிரைவிங்கின்போது சார்ஜ் குறைந்தால், ‘எந்திரன்’ படத்தில் வருவதுபோல் ‘பேட்டரி லோ’ என்று அலாரம் அடித்து டிரைவரை எச்சரிக்கும். இந்த பேட்டரியின் ஆயுள்காலம் 5 முதல் 7 ஆண்டுகள். பொதுவாக, பேட்டரிகள் ஆயுள் முடிந்த பிறகு யூஸ் அண்ட் த்ரோ வகையைச் சேர்ந்ததாகவே இருக்கும். ஆனால், இதில் உள்ள லித்தியம் ஐயன் பேட்டரியை ரீ-சைக்கிள் செய்தும் பயன்படுத்தலாமாம். மொத்தம் 31 சீட்களைக் கொண்ட இந்த பஸ்ஸின் டாப் ஸ்பீடு 75 கி.மீ. ‘சர்க்யூட்' பஸ்ஸின் ஆன் ரோடு விலை பற்றிச் சொல்லவில்லை அசோக் லேலாண்டு. ஆனால், சீட் மற்றும் பேட்டரியைப் பொறுத்து, இதன் விலை ரூபாய் 1.5 கோடி முதல் 3.5 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick