ஓவர்... டேக்!

பாதுகாப்பு - விதிமுறைகள்இரா.கலைச்செல்வன்

சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை, 69,059. இதில் தவறாகத் திரும்புதல் மற்றும் ஓவர்டேக் செய்வதால் மட்டும் ஏற்பட்ட விபத்துகள், 18,237. அதாவது, நான்கு விபத்துகள் நடந்தால், அதில் ஒரு விபத்து  ஓவர்டேக் செய்வதால் ஏற்படுகிறது. எனவே, ஓவர்டேக் செய்யும் போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பின்தங்கி முந்துங்கள்

பெரும்பாலும் ஓவர்டேக் செய்யும்போது, பலரும் செய்யும் தவறு... நமக்கு முன்னால் செல்லும் வாகனத்துக்கு நெருக்கத்தில் சென்று, சடாரென முந்த முயற்சிப்பது. நீங்கள் முந்தவிருக்கும் வாகனத்துக்கும் உங்களுக்கும் குறைந்தபட்சம் 30 அடி தூரமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் சாலை முழுமையாகத் தெரியும்.

சாலைப் பார்வையில் தெளிவு

சாலை தெளிவாகத் தெரியும்போது முந்துவதே சிறந்தது. வளைவுகளிலோ, சாலை சரியாகத் தெரியாத இடங்களிலோ முந்தாதீர்கள். அதேபோல, சாலை குண்டு குழியில்லாமல் இருக்கிறதா, எதிரில் வாகனங்கள் வருகின்றனவா? பாதசாரிகளோ, கால்நடைகளோ குறுக்கே வர வாய்ப்பு இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகு முந்துங்கள்.

ரியர்வியூ முக்கியம்!

இருவழிப் பாதை அல்லது நான்கு வழிச்சாலை என எதுவாக இருந்தாலும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் ரொம்ப முக்கியம். சமயங்களில் உங்களுக்குப் பின்னால் இருக்கும் வாகனம், உங்களை வேகமாக முந்த முயற்சிக்கலாம். அதைக் கவனிக்காமல், நீங்களும் முந்த முயற்சித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இரு பக்கக் கண்ணாடிகளையும் நன்கு கவனித்தே பிறகே ஓவர்டேக் செய்ய வேண்டும்.

சிக்னல் செய்யுங்கள்

நிச்சயம் இண்டிகேட்டர் உபயோகப்படுத்துங்கள். அது உங்களுக்குப் பின்னால் வரும் வாகனத்தை உஷார்படுத்தும். அதேபோன்று, பாஸ் லைட்டையும் பயன்படுத்தலாம். அது எதிர்வரும் வாகனங்களுக்கு சமிக்ஞையாக இருக்கும். அவசியமான இடங்களில் ஹார்ன் கொடுங்கள்.

கியர் மாற்றம் மற்றும் வேகம்

ஓவர்டேக் செய்யும்போது, வேகத்தை அதிகப்படுத்துவது அவசியம். முந்தும் வாகனத்தோடு  சீரான வேகத்தில், ஒருசேரப் போய்க்கொண்டிருந்தால் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். முந்தும் போது சரியான கியரை மாற்றி, தேவைப்பட்டால் கியரைக் குறைத்து வேகமாகச் செல்லுங்கள்.

பொறுமை அவசியம்

சமயங்களில் ஒற்றைச் சாலையில் செல்லும்போது ஓவர்டேக் செய்வது சற்று கடினமாக இருக்கும். வாகனங்கள் முன்னும் பின்னும் வந்துகொண்டிருக்கும். சரியான நேரம் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து, பிறகு முந்துங்கள்.

உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

வாகனத்தை எப்பொழுதும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருங்கள். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் பிரேக் பிடிக்கலாம், நீங்கள் கணக்கிட்ட நேரத்தைவிட எதிரில் வரும் வாகனம் விரைவாக வந்துவிடலாம், வாகனம் சாலையை விட்டு இறங்கிவிடலாம்... எதுவாக இருப்பினும் வாகனம் உங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.

ஹை பீம் வேண்டாமே!

இரவு நேரங்களில் ஓவர்டேக் செய்யும்போது அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். யாருமே இல்லாத சாலையில் ஹைபீம் போடலாம்; இது சாலையைத் தெளிவாகக் காண்பிக்கும். இதுவே எதிரே வாகனங்கள் வரும்போது, ஹைபீம் பயன்படுத்த வேண்டாமே!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick