‘‘மோட்டோ ஜிபி போணும் அங்கிள்!’’ - சுட்டி ரேஸர்கள் | மோட்டார் விகடன்

‘‘மோட்டோ ஜிபி போணும் அங்கிள்!’’ - சுட்டி ரேஸர்கள்

பாக்கெட் பைக்ஸ் - ரேஸ்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

‘‘நான் ரேஸர்னு சொன்னா எங்க ஸ்கூல்ல யாரும் நம்பமாட்றாங்க அங்கிள்!’’ என்று ‘உச்’ கொட்டினான் வினித். ஆம், யாராலும் நம்ப முடியாது. காரணம், முதலாம் வகுப்பு மாணவனான வினித்துக்கு வயது ஜஸ்ட் 6.

‘‘என்னைவிட என் அண்ணா பெஸ்ட்!’’ என்று சொல்லும் வினித்தின் அண்ணன் ரோஹித்தும் இதே டிராக்கில் பாக்கெட் பைக் ரேஸராக, சர்க்யூட் ரேஸுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான். அண்ணன் - தம்பி  இருவரும் முறையே 3-ம் வகுப்பு, 1-ம் வகுப்பு படிக்கும் பாலகர்கள். ஆனால், ரேஸ் ட்ராக்கில் ஒரு பைக்கை எப்படிக் கையாள வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்த பாவலர்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு நடக்கும் ‘பாக்கெட் பைக் சர்க்யூட் ரேஸுக்காக’ ஐரோப்பிய நாடுகளுக்குப் பறக்க இருக்கிறார்கள்.

‘‘நீங்க வருண் அண்ணாவைப் பார்க்கலையே! அவரைப் பார்த்துத்தான் எங்க அம்மா - அப்பா இங்க சேர்த்துவிட்டாங்க!’’ என்று கோரஸாகச் சொன்னார்கள் இருவரும். வருண், ஏற்கெனவே மோ.வி வாசகர்களுக்குப் பரிச்சயமான சிறுவன். தற்போது நடந்து முடிந்த சுஸூகி ரூக்கி கப் ரேஸில், 150 சிசி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த வருணுக்கு இப்போது வயது 13. அடுத்த நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸிங்குக்குத் தயாராகி வருகிறார்.

‘‘இந்தியாவில் பாக்கெட் பைக் ரேஸ் கிடையாதே... எப்படி?’’ என்று நம் சந்தேகத்தைக் கேட்டபோது, ‘‘அதுக்காகத்தான் இவங்களை ஐரோப்பாவுக்கு அனுப்பத் தயாராக்கிட்டிருக்கேன். இவங்க மூணு பேரும்தான் இப்போ என் ரேஸிங் டீமோட நம்பிக்கை நட்சத்திரங்கள்!’’ என்றார் சுதாகர். ‘கிங்டம் ரேஸிங் இந்தியா டீம்’ நிறுவனர் மற்றும் ஏழு முறை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கிய 16 வருட புரொஃபஷனல் ரேஸர்.

‘‘வருண் எங்கிட்ட வரும்போது, அவனுக்கு 11 வயது. ஏற்கெனவே பாக்கெட் பைக் ஓட்டி எக்ஸ்பெர்ட் ஆகிட்டதால, அவனுக்கு ட்ரெயினிங் கொடுக்கிறது பெரிய விஷயமா தெரியலை. இப்போ அவன் சுஸூகி ரூக்கி கப் ரேஸ்ல எல்லோருக்கும் சவாலா இருக்கான். அடுத்த வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப்புக்கு அவனைத்தான் எங்க டீம் சார்பா இறக்கப்போறேன். வருண், ரோஹித், வினித் என்று மட்டும் இல்லை. மீதமிருக்கும் 12 மாணவர்களையும் சாம்பியன் ஆக்கியே தீருவேன். அதுக்குத்தான் கடுமையான பயிற்சி போய்க்கிட்டிருக்கு!" என்றார் சுதாகர். இதில் இரண்டு பெண்களும் அடக்கமாம்.

வினித்தும் ரோஹித்தும் இதில் கொஞ்சம் குட்டியூண்டு ஸ்பெஷல். காரணம், சர்க்யூட் ரேஸில் நீண்ட தூர லேப்களுக்காக இப்போதே பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, பெரிய பெரிய ரேஸ்களில் நடப்பதுபோல் 50 முதல் 60 லேப்கள் கொண்ட சர்க்யூட் ரேஸ், சிறுவர்களுக்கு இயலாத காரியம் என்று நினைத்ததைத் தவிடுபொடியாக்குகிறார்கள். 300 மீட்டர் நீளம் கொண்ட மெரினா கோ-கார்ட் ரேஸ் டிராக்கில் 50 லேப்களை ‘வ்வ்ர்ரூம்... வ்வ்வ்ர்ர்ரூம்’ என நான்-ஸ்டாப்பாக முடித்து வந்து நம்மை அசத்துகிறார்கள்; ‘ஆயில் ஒழுகி எக்ஸாஸ்ட்ல கலக்குது மாஸ்டர்... என்னானு பாதுங்க’ என்று மழலை மொழியில் மெக்கானிக் ஆகிறார்கள்; ‘எனக்கு 50 சிசி பத்தலை அங்கிள்’ என்று சலித்துக்கொள்கிறார்கள்; ‘டேய் வினித், கார்னரிங்ல வருண் அண்ணா மாதிரி ஓட்டணும்டா... அப்போதான் மோத்தோ ஜீபி போக முடியும்’ என்று டிராக்கில் ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick