அடுத்தது அட்வென்ச்சர்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்ட்ரீட் பைக்கான G310R மாடலை அறிமுகப்படுத்தவிருப்பது தெரியும். இதனுடன் தனது பெரிய பைக்குகளையும் அடுத்த ஆண்டில் களமிறக்கும் பிஎம்டபிள்யூ, G310R பைக்கின் அட்வென்ச்சர் மாடலான G310GS பைக்கையும் கொண்டுவருகிறது.

இது விற்பனைக்கு வரும்போது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சின்ன இன்ஜினைக்கொண்ட இம்பல்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் பைக்குக்கு இடையே பொசிஷன் செய்யப்படலாம். பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே உரிய கட்டுமானத் தரம் மற்றும் டிஸைன் கோட்பாடுகளுடன் சேர்ந்து, அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ப ரீ-ட்யூன் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு 313 சிசி  இன்ஜின், சுமார் 35bhp பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். பிஎம்டபிள்யூவின் G310R மற்றும் G310GS ஆகிய இரண்டு பைக்குகளும், கேடிஎம் நிறுவனத்தின் ஸ்போர்ட்டியான டியூக்/RC பைக்குகளைவிட சொகுசு மற்றும் ஓட்டுதல் தரத்தில் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

ஜரோப்பியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்வதில் முதல் இடத்தை வகித்த பிஎம்டபிள்யூ, தனது இடத்தை ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனத்திடம் இழந்துவிட்டது. எனவே, தனது பிராண்ட் மதிப்பை முன்வைத்து பைக்குகளை இந்தியாவில் களமிறக்க உள்ள பிஎம்டபிள்யூ, டிவிஎஸ் நிறுவனத்துடன் சேர்ந்து G310R பைக்கை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யவிருக்கிறது. கடந்த ஆண்டு மிலன் மோட்டார் ஷோவில் இந்த பைக் வெளியான நிலையில், G310GS பைக்கை இந்த ஆண்டு நடைபெறும் மிலன் மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ காட்சிப்படுத்தலாம்.

இந்தியாவில் அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் திறமை, பிஎம்டபிள்யூவின் G310GS பைக்குக்கு இருக்கிறது. அதன் வரவேற்பைப் பொறுத்து, டிவிஎஸ் நிறுவனமும் அதை அடிப்படையாகக்கொண்டு ஓர் அட்வென்ச்சர் பைக்கைத் தயாரிக்கும் நாள் தொலைவில் இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick