எக்ஸிக்யூட்டிவ் எலான்ட்ரா... மாறியது எல்லாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் | ஹூண்டாய் எலான்ட்ராவேல்ஸ் | படங்கள்: பா.காளிமுத்து

ரு தலைமுறை காருக்கும், அடுத்த தலைமுறை காருக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்களைக் காட்டுவதுதான் ஹூண்டாயின் ஸ்டைல். i20, சான்டஃபீ, டூஸான்... என்று இதில் எதற்கும் விலக்குக் கிடையாது. அதேபோல, இப்போது வெளிவந்திருக்கும் எலான்ட்ரா காருக்கும் பழைய எலான்ட்ராவுக்கும் ஏராளமான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது.

விற்பனையாகும் செடான் கார்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அதில் எக்ஸிக்யூட்டிவ் செக்மென்ட் கார்களுக்கு இருப்பது வெறும் இரண்டு சதவிகிதம் தான். ஆனாலும், எலான்ட்ராவின் வெற்றி குறித்து மிக மிக உற்சாகமாக இருக்கிறது ஹூண்டாய். பழைய எலான்ட்ராவைவிட புதிய எலான்ட்ரா 20 மிமீ அளவுக்குத்தான் நீண்டிருக்கிறது. 25 மிமீ அளவுக்குத்தான் அகலம் கூடியிருக்கிறது. ஆனாலும், புதிய எலான்ட்ரா பார்வைக்குப் பெரிதாகக் காட்சியளிக்கிறது.

பூமராங் வடிவத்தில் வடிவமைப்பட்டிருக்கும் ஏர் டேம், பார்ப்பதற்கு மட்டுமல்ல... செயலிலும் சூப்பர். இதன் புதிய வடிவமைப்பால், காரின் மைலேஜ் கூடுவதாக ஹூண்டாய் சொல்கிறது. எலான்ட்ராவின் மோனோ காக் டிஸைனும் காரின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலும் காரின் கட்டுமானத்தை மேலும் உறுதியாக்குகின்றன. காரின் முன்பக்கத்துக்கு மெக்பர்ஸன் சஸ்பென்ஷனும். பின்பக்கத்துக்கு நான் இன்டிபென்டண்ட் டார்ஷன் பீம் ஆக்ஸிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பழைய எலான்ட்ராவில் இருந்த அதே 205/60 R16 டயர்கள்தான் இதிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோலில் இருக்கும் பட்டன்கள், பவர் விண்டோஸ் பட்டன்கள்... என எல்லாமே க்ரெட்டா, i20 ஆகிய கார்களைப்போல தரமானதாக இருக்கின்றன.

காரின் சாவி பையில் இருக்கும்போது, காரின் பின்பக்கம் போய் நின்றாலே காரின் டிக்கி திறந்துகொள்வது புதுமை. ஆனால், இந்தப் புதுமை எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இந்த செக்மென்ட் காரில் இருக்க வேண்டிய பல அம்சங்கள் இந்த காரில் இருக்கின்றன. ஆனால், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், பேடில் ஷிஃப்டர்ஸ், மெமரி சீட்ஸ் போன்றவை இதில் இல்லை. விலை குறைந்த வேரியன்டில் பார்க்கிங் சென்ஸார், எல்ஈடி விளக்குகள், புரொஜெக்டர் ஃபாக் லைட்ஸ் ஆகியவை இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick