எந்திரன் - 22

பரணிராஜன்

னித உடலுக்கு அடிப்படை வடிவமைப்பு தருவது எலும்புக்கூடு. அதாவது, ஸ்கெலிட்டன் (Skeleton). அதுபோல, வாகனங்களுக்கு அடிப்படையான வடிவமைப்பைத் தருவது, சட்டகம் அல்லது சேஸி (Chassis). எளிதாகச் சொன்னால், ‘ஃப்ரேம்’ எனும் அமைப்பு. இதன் முக்கிய வேலைகள் என்ன?

ஒரு வாகனத்தின் இயந்திரப் பாகங்களின் இருப்பை உறுதிசெய்வது; மாறா (Static) மற்றும் மாறும் (Dyanamic) பளுக்களினால் ஏற்படும் விலக்கங்களை (Deflection) தாங்குவது; வாகனம், பயணிகள் மற்றும் சுமைகளின் எடைகளைத் தாங்குவது; முறையற்ற பரப்புகளில் வாகனம் செல்வதால் ஏற்படும் செங்குத்து மற்றும் முறுக்கு விசைகளைக் கடத்துதல்; வாகனத்தின் பக்கங்களைக் கடந்துசெல்லும் காற்று, வாகனத்தைத் திருப்புவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குறுக்கு விசைகளை (Transverse Lateral Force) தாங்குதல்;  இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் இருந்துவரும் திருப்புத் திறன்களைத் தாங்குதல்; ஸ்டார்ட்டிங் மற்றும் ஆக்ஸிலரேஷன்களில் ஏற்படும் லாங்கிடியூடினல் டென்ஸைல் விசைகள் (Longitudinal Tensile Forces) மற்றும் ப்ரேக்கிங்கினால் ஏற்படும் கம்ப்ரஷன்களைத் தாங்குதல்; மோதல்களினால் ஏற்படும் திடீர்த் தாக்குதல்களைத் தாங்குதல் என ஏராளமான வேலைகளை இந்த ஃப்ரேம்தான் செய்கிறது. பொதுவாக, ஃப்ரேம் கார்பன் ஸ்டீலில் தயாரிக்கப்படுகிறது. எடை குறைவான வாகனங்களில் அலுமினிய உலோகக் கலவையாலும் செய்யப்படுகிறது. லேடர் ஃப்ரேம் (Ladder Frame), யுனிபாடி ஃப்ரேம் (Unibody), எக்ஸ் ஃப்ரேம், பேக்போன் ட்யூப் (Backbone Tube), பெரிமீட்டர் ஃப்ரேம்(Perimeter Frame), பிளாட்ஃபார்ம் ஃப்ரேம்  எனப் பல வகைகளில் ஃப்ரேம்கள் உள்ளன. பெரும்பாலான நவீன வாகனங்கள் யுனிபாடி கட்டமைப்பில்தான் வடிவமைக்கப்படுகின்றன. இதில் ஃப்ரேம் உடன், வாகனத்தின் பாடியும் சேர்த்து கட்டமைக்கப்படுகிறது. இது இலகுவான எடையுடனும், திடமாகவும் இருக்கும். இந்த வடிவமைப்பில் வாகனத்தின் மொத்தப் பாகமுமே எடை தாங்கும் உறுப்புகளாக மாறிவிட்டிருக்கும்.   
     
சஸ்பென்ஷன் அமைப்புகள்

ஃப்ரேம்-ல் இன்ஜின், கியர்பாக்ஸ், டிஃப்ரன்ஷியல், நான்கு டயர்களையும் சேர்த்தால், முழு வாகனம் ஆகிவிடும். அதன் பின்பு, அதனை அப்படியே நம் ஊர்ச் சாலைகளில் ஓடவிட்டால் என்னாகும்? இருக்கும் மேடு பள்ளங்களுக்கு ஏற்றதுபோல ஃப்ரேமும், அதனுடன் இணைந்திருக்கும் பாகங்களும் மேலும் கீழும் தூக்கி வாரிப் போடும். அதே கதிதான் பயணிகளுக்கும் ஏற்படும். பயணத்தை ரசிக்க இயலாது. சாலையின் ஒழுங்கற்ற வடிவங்களுக்கேற்ப, நாமும் பயணிக்க வேண்டியிருக்கும். அடிக்கடி மேலும் கீழும் தூக்கிப் போடப்படுவதால் இன்ஜின், கியர்பாக்ஸ் முதலான முக்கிய பாகங்கள் எளிதில் பழுதடையும். இதனை எல்லாம் தவிர்க்க, ஒரு தனியான அமைப்பு தேவைப்படுகிறது. அதுதான் சஸ்பென்ஷன். ஒரு நல்ல சஸ்பென்ஷன், டயர்களுக்கும் சாலைகளுக்கும் இடையேயான உராய்வை அதிகப்படுத்துவதும், சிறந்த ஸ்டீயரிங் திறனுடனான கையாளுமை(Handling) மற்றும் பயணிகளின் வசதியை உறுதி செய்வதுமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick