அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

தீபாவளி வந்தாலே ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சிதான். இந்த ஆண்டும் வழக்கம்போல தீபாவளி மற்றும் அதை ஒட்டிவரும் பண்டிகைகளை மனதில்வைத்து, வரிசையாக பல கார்களும் பைக்குகளும் அறிமுகமாக இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, தற்போது அறிமுகமாகி இருக்கும் மஹிந்திரா பொலேரோ. அதிகம் விற்பனையாகும் கார் பட்டியலில் இடம்பெறும் வாகனம் பொலேரோ. இத்தனைக்கும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு, இதில் கவர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் இல்லை. பல எஸ்யூவிகளும் காம்பேக்ட் எஸ்யூவிகளும் போட்டிக்கு வந்தபோது, எந்தவித சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடையைப்போல இருக்கும் இதன் விற்பனை, போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய புதிர். இப்போது பொலேரோவை நான்கு மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட காராக வடிவமைத்திருப்பதுடன், இதற்கு பொலேரோ ‘பவர் ப்ளஸ்’ என்ற பெயரையும் சூட்டியிருக்கிறது. இது பழைய பொலேரோவைவிட ஒரு லட்சம் ரூபாய் வரை விலை குறைவு என்பது நிச்சயம் தீபாவளி போனஸ்தான்.

பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ள புதுவகை வாகனமான ‘குவாட்ரி சைக்கிள்,’ நம் நாட்டுக்கு புதுசு. இப்படி ஒரு செக்மென்ட்டை நம் நாட்டில் உருவாக்கிய பெருமை பஜாஜையே சேரும். காராகவும் இல்லாமல், ஆட்டோவாகவும் இல்லாமல் புதுவகையாக இருக்கும் இந்த வாகனத்துக்கு, ‘க்யூட்’ எனப் பெயரிட்டிருக்கிறது பஜாஜ். நானோ காரை டாடா கொண்டுவந்தபோது அதற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதில் பாதி அளவுக்கு பஜாஜின் க்யூட் குவாட்ரி சைக்கிளுக்கும் இருக்கிறது. நானோவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்ததோ, அதில் பாதி அளவுக்கு இதற்கு எதிர்ப்பும் இருக்கிறது. போட்டியாளர்களின் எதிர்ப்புகள், அரசின் நிபந்தனைகள், நீதிமன்றங்களின் வழிக்காட்டுதல்கள் என்று ஒவ்வொரு தடைகளாகக் கடந்துகொண்டிருக்கும் க்யூட்டில், அப்படி என்னதான் இருக்கிறது? முதல் டெஸ்ட் டிரைவ் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. 

‘லைசென்ஸ் எங்கே, ஆர்.சி. புக் எங்கே?’ என்று போலீஸ் கேட்டால் என்ன செய்வது? அது க்ளோவ் பாக்ஸில் இருக்கிறதா, பர்ஸில் இருக்கிறதா... என்ற குழுப்பத்தில் டென்ஷன் ஆகிறவர்கள், இனி ரிலாக்ஸ் ஆகலாம். ஆம், இந்த டென்ஷன்களுக்கு எல்லாம் தீர்வாக, மத்திய அரசு ‘டிஜிலாக்கர்’ எனும் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, அரசு ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளத்தான். digilocker.gov.in என்ற வலைதளத்தில் இலவசமாக இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யலாம். இதன் செக்யூரிட்டி, நம்பகத்தன்மைக் குறித்து சில சந்தேகங்களும் எழலாம். ஆனால், இது வரவேற்கத்தக்க முயற்சியே.

தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick