“எல்லோருக்கும் பிடிக்கும் ஏமியோ!”

ரீடர்ஸ் ரெவ்யூ | ஃபோக்ஸ்வாகன் ஏமியோ ஆ.ஐஸ்வர்ய லட்சுமி | படங்கள்: பா.பிரபாகரன்

ங்கள் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். வீட்டில் ஏதாவது ஒரு கார் இருந்துகொண்டே இருக்கும். சின்ன வயதில் இருந்தே கார் ஓட்டுவதில் ஆர்வமாக இருந்தேன். ஆனால், கல்லூரி செல்லும் வரை வீட்டில் கார் ஓட்ட அனுமதிக்கவில்லை. அதன் பின்பு கார் பழகி, கடந்த 20 ஆண்டுகளாக ஓட்டுகிறேன். இதற்கு முன்பு ஃபோர்டு ஃபியஸ்டா வைத்திருந்தேன். எனக்குத் திருமணம் ஆகி பிள்ளைகள், குடும்பம் என ஆனபிறகு, தொழில்ரீதியாக கெளரவம் அளிக்கக்கூடிய நல்ல பிராண்டட் கார் வாங்கலாம் என்று தீர்மானித்தேன். கடந்த சில மாதங்களாக புதிய கார்கள் பற்றிய விவரங்களை ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் ஆகிய இரண்டும் எனக்கு சரியான பிராண்ட் எனப் பட்டது. ஆனால், நண்பர்களும் உறவினர்களும் ஃபோக்ஸ்வாகன் நல்ல சாய்ஸ் என்று சொன்னார்கள். எனவே, ஃபோக்ஸ்வாகன் போலோ அல்லது வென்ட்டோ என்ற முடிவுக்கு வந்தேன்.

ஷோரூம் அனுபவம்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ABRA மோட்டார்ஸ் ஷோரூம் சென்று போலோவையும் வென்ட்டோவையும் பார்த்தேன். என் மனைவி ஜெனி, ‘நீங்கள் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவீர்கள். நான்தானே அதிகம் பயன்படுத்துவேன். எனவே, டீசல் கார் நமக்கு வேண்டாம்; பெட்ரோல் கார் வாங்குங்கள்’ என்று சொல்லியிருந்தார். போலோ, என் பட்ஜெட்டுக்குள் வந்தாலும் சின்ன காராக இருந்தது. வென்ட்டோ, பெரிய கார்தான். ஆனால், பட்ஜெட் அதிகமாக இருந்தது. என் தேவையை சேல்ஸ் மேனேஜரிடம் சொன்னேன். அவர்தான் ஏமியோவைப் பரிந்துரைத்தார்.

ஏன் ஏமியோ?

நான், என் மனைவி, இரு குழந்தைகள் கொண்டது என் குடும்பம். குடும்பத்துடன் அடிக்கடி காரில் பயணம் செய்வேன். எனவே, பயணங்களுக்கும், ஸ்மூத் டிரைவிங்குக்கும் வசதியான பக்கா காம்பேக்ட் காரை வாங்க ஆசைப்பட்டேன். ஏமியோவின் டிஸைன் எனக்குப் பிடித்திருந்தது. சின்ன காராகவும் இல்லாமல், பெரிய காராகவும் இல்லாமல் என் பட்ஜெட்டுக்குள்ளும் இருந்தது. அதனால், டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு வந்து என் மனைவியிடம் கூறினேன். அவருக்கும் ஏமியோவைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. ஆனால், என் வீட்டில் இருந்த பெரியவர்களுக்குத் திருப்தி இல்லை. ஆனாலும் ஏமியோ வாங்கலாம் எனத் தீர்மானித்தேன்.  காரின் கலரைத் தேர்ந்தெடுத்தது என் மனைவிதான். ஏமியோவின் டாப் மாடல் வேரியன்ட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. பட்ஜெட்டும் எனக்குக் கச்சிதமாக இருந்தது. எனவே, ஃபோக்ஸ்வாகன் ஏமியோவை புக் செய்துவிட்டேன். காரின் டெலிவரி தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பே தந்துவிட்டார்கள்.

எப்படி இருக்கிறது ஏமியோ?

காரை டெலிவரி எடுத்ததும் குடும்பத்துடன் தேவாலயம் சென்றுவந்தோம். முதலில் ஏமியோ வேண்டாம் என்று சொன்ன என் குடும்பத்தினர், பயணம் செய்து பார்த்த பிறகு, ‘குட் சாய்ஸ்’ என்று பாராட்டுகிறார்கள். சிட்டியில் 13  -14 கி.மீ வரையில் மைலேஜ் கொடுக்கிறது. இன்னும் நெடுஞ்சாலைப் பயணம் செல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick