கலக்குது காப்டுர்! | Renault Kaptur - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்

கலக்குது காப்டுர்!

முதல் பார்வை: ரெனோ காப்டுர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ரெனோவுக்கு இந்தியாவில் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது போல. ஒன்று கவனித்தீர்களா? இந்தியாவில் ரெனோவுக்கு வெற்றியைக்கொடுத்த க்விட், டஸ்ட்டர் ஆகிய இரண்டு கார்களுமே இந்திய சந்தைக்கு என உருவாக்கப்பட்டவை. இதில், அடுத்து சேர இருக்கும் கார்தான் புதிய காப்டுர் (இது Captur இல்லை Kaptur).

நம் ஊர் டஸ்ட்டரின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த கார் யூத்ஃபுல்லாக இருக்கிறது. ஐரோப்பியன் Captur காரைவிட நீளமான முன்பக்கத்தைக் கொண்டிருக்கிறது Kaptur. டெக்னிக்கலாக கார் மிகவும் ரஃப்-டஃப். ஆனால், காப்டுரின் உள்பக்கம் மாடர்ன். டஸ்ட்டரைவிட ஒட்டுமொத்த தரம் உயர்வாக இருந்தாலும், டஸ்ட்டரில் இருந்த பல பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

டஸ்ட்டரைவிட அகலமான கார் என்பதால், பின்னிருக்கை இடவசதி பெர்ஃபெக்ட். முக்கியமாக பின்னிருக்கையின் உயரம் கச்சிதமாக இருக்கிறது. கால்களுக்குப் போதுமான இடவசதி தாராளமாகவே இருக்கிறது. மூன்று பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், எல்போ ரெஸ்ட் கிடையாது. காருக்குள் இடவசதி அதிகமானதால், இப்போது டிக்கியில் இடம் குறைந்துவிட்டது. டஸ்ட்டரில் 475 லிட்டர் பூட் கொள்ளளவு இருக்க, இதில் 387 லிட்டர்தான். ஆனால், பின்னிருக்கையை மடித்துக்கொள்ளலாம்.

 நெடுஞ்சாலையில் ‘டக் டக்’ என்று வளைத்து நெளிக்கும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உயரமான கார் என்பதால், ஏற்றுக்கொள்ளக்கூடிய பாடி ரோல் இருக்கவே செய்கிறது. பிரேக்ஸ் செம ஸ்ட்ராங். பெடல் ஃபீட்பேக்கும் சிறப்பாக இருக்கிறது.

மோசமான சாலைகளை சஸ்பென்ஷன் சிறப்பாகவே சமாளிக்கிறது. ரொம்பவும் இறுக்கமாகவும் இல்லாமல், ரொம்பவும் சாஃப்ட்டாகவும் இல்லாமல், ஒரு கச்சிதமான பேலன்ஸில் ஓடுகிறது கார்.
கார் 1.4 டன் எடை கொண்டிருக்க, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் 143bhp பவர் போதுமானதாக இருக்கிறது. மிகவும் ஸ்மூத்தான இன்ஜின் இது. ஆனால், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சுமார்தான். இந்தியாவில் 110bhp 1.5 DCi டீசல் இன்ஜினுடன் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

முதல் தீர்ப்பு

டஸ்ட்டரைவிட சிறப்பான எஸ்யுவியாக உருவாகியிருக்கிறது காப்டுர். டஸ்ட்டரைவிட விலை அதிகமாக, சுமார் 16 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வரும். இந்தியர்களுக்குப் பிடித்த மாதிரியே கரடுமுரடான தோற்றம், உள்ளே ஸ்மார்ட்டான சொகுசு உணர்வு என ஓவர்-ஆல் பெர்ஃபாமென்ஸில் மனதில் பதிந்துவிட்டது காப்டுர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick