பிஎம்டபிள்யூ பிராண்ட் அம்பாஸடர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: பிஎம்டபிள்யூ 320iதொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் பிஎம்டபிள்யூ புகழ் பரப்பியதில், 3 சீரிஸ் காருக்குப் பெரிய பங்கு உண்டு. லக்ஸுரியான கேபினுடன் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை அளிக்கும் இந்த காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தி அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ. பிரஸ்டிஜ், லக்ஸுரி எனும் இரண்டு வேரியன்ட்களில் களமிறங்கியிருக்கும் பெட்ரோல் 3 சீரிஸ் கார் எப்படி இருக்கிறது?

பெட்ரோல் காருக்கும் டீசல் காருக்கும் தோற்றம் மற்றும் கேபினில் எந்த வித்தியாசமும் இல்லை. 320i எனும் பேட்ஜைக்கொண்டுள்ள இந்த காரில் இருப்பது, 4 சிலிண்டர்களைக்கொண்ட 1,997சிசி, டர்போ சார்ஜ்டு டைரக்ட் இன்ஜெக்‌ஷன் இன்ஜின். ZF தயாரித்துள்ள 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 184bhp பவரையும், 27kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

தரமான மெட்டீரியல்களும், சற்று இறுக்கமான பிளாஸ்டிக்கும் சேர்ந்த 3 சீரிஸின் கேபின் வடிவமைப்பு, C-க்ளாஸ் காருடன் ஒப்பிடும்போது பழையதாகத் தெரிகிறது. பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான தாழ்வான, ஸ்போர்ட்டியான இருக்கைகள் வயதானவர்களுக்கு ஏற்றது இல்லை. ஆனால், இருக்கையில் உட்கார்ந்த பிறகு கிடைக்கக்கூடிய சொகுசு சிறப்பாக இருக்கிறது.

லெதர் இருக்கைகள். 8.8 இன்ச் iDrive டச் ஸ்கிரீன், 20GB ஸ்டோரேஜ், சாட்டிலைட் நேவிகேஷன், 9 ஸ்பீக்கர்களுடன்  205W திறன்கொண்ட ஆடியோ சிஸ்டம், பேடில் ஷிஃப்ட்டர்கள்(கம்ஃபர்ட், எக்கோ Pro, ஸ்போர்ட், ஸ்போர்ட் +), டிரைவிங் மோடுகள் என அதிக சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

0 - 100 கி.மீ வேகத்தை C-க்ளாஸ் காரைவிட வெறும் 0.03 விநாடிகள் அதிகமாக, அதாவது 8.11 விநாடிகளில் எட்டிப்பிடிக்கிறது 3 சீரிஸ். 1,500 ஆர்பிஎம் தொடங்கி 6,800 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி ஸ்மூத்தாக இருப்பதுடன், இன்ஜினும் ஃப்ரீயாக ரெவ் ஆகிறது. Naturally Aspirated இன்ஜின்கள் அளவுக்கு இதன் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் இல்லை என்பது மைனஸ். ஆரம்ப வேகத்தில் இன்ஜின் சுணங்கினாலும், டர்போ சார்ஜர் கொண்ட கார்களுக்கே உரிய அதிரடியான மிட் ரேஞ்ச், மேலே சொன்ன குறைகளை மறக்கச் செய்கிறது. துல்லியமான ஸ்டீயரிங் மற்றும் அற்புதமான நிலைத்தன்மை ஆகியவை, 3 சீரிஸ் காரின் கையாளுமையை ரசிக்கும்படி மாற்றுகின்றன. மேடு பள்ளங்கள் கொண்ட சாலையில் செல்லும்போது, சஸ்பென்ஷன் அவற்றை நல்ல முறையில் உள்வாங்கிக்கொள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick