நெடுஞ்சாலை வாழ்க்கை - 40

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அன்யோன்யம்!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

னக்கு இருட்டில் மலையேற வேண்டுமே என்ற கவலை; அவர்களுக்கோ, வழி கிடைத்த மகிழ்ச்சி. யாரும் சாப்பிடவில்லை; சாப்பிடவும் பிடிக்கவில்லை. மணி, ஆக்ஸிலரேட்டர் அழுத்தும் வேகத்தைப் பார்த்தால், ஸ்ரீநகரைத் தவிர வேறு எங்கும் நிறுத்தமாட்டார் போலிருந்தது. இரண்டு தினங்களாக சாலையில் காத்திருந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தும் யத்தனத்தில் பாய்ந்துகொண்டிருந்தன. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சுமார் 300 கி.மீ தூரம். ஜம்முவில் இருந்து செங்குத்தாக மேலேறும் மலைச் சாலையில், பட்னி என்ற இடம்தான் உயரமானது. அங்கிருந்து மீண்டும் கீழிறங்கத் துவங்கி மலைகள் பல கடந்து காஷ்மீர் சமவெளிக்குள் நுழைய வேண்டும். சாலையைத் தவிர, எல்லாமே இருட்டாகத்தான் இருந்தன. நான் மொபைலில் ஜிபிஎஸ் ஆன் செய்தேன். இருட்டில் அந்த இடங்கள் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும், கூகுள் மேப் எப்படிப்பட்ட இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியது. மலைமீது ஏறத் துவங்கிய சில கிலோ மீட்டரிலேயே ஒரு பெரிய டனல் இருந்தது. அதற்குள்தான் போக்குவரத்து.

ராணுவத்தினரின் நடமாட்டம் ஆரம்பமாகி இருந்தது. ஆனாலும், போலீஸ் ஆங்காங்கே நின்று வசூல் செய்வதில் மட்டும் சுணக்கம் காட்டவில்லை. எவ்வளவு மழையானாலும் எவ்வளவு குளிரானாலும் லாரியைப் பார்த்தவுடனே கைநீட்டும் லாவகம் அவர்களுக்குக் கைவந்த கலை. பட்னி அருகே சாலையோரத்திலேயே இருந்தது போலீஸ் ஸ்டேஷன். பிளாஸ்டிக்கால் ஆன பேரிகார்டில் சாலையை மறித்து, ஒவ்வொரு லாரியாக வசூல் செய்துகொண்டிருந்தனர் சில காவலர்கள். சற்றுத் தள்ளி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் சிலர் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். ஒவ்வொரு லாரியாக தண்டம் அழுதபடி நகர்கின்றன. அதில் ஒரு லாரி பணம் தராமல் ஆக்ஸிலரேட்டரை அழுத்த.... பிளாஸ்டிக் பேரிகார்டை லாரியின் முன்னே எட்டி உதைக்க... பிளாஸ்டிக்கில் மோதிய லாரி பெருஞ்சத்தத்துடன் நிற்கிறது. வசைகள் வாக்குவாதம் நடந்த பிறகு பணம் தராமல் சென்றது அந்த பஞ்சாப் லாரி. நான் ராணுவத்தினரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் முகத்தில் சலனம் இல்லை. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், ‘பணம் தராதே’ எனக் குறும்பாக என்னிடம் சைகை செய்கிறார். ஆனாலும் மணிக்கு வாக்குவாதம் செய்ய விருப்பமோ, நேரமோ இல்லை. 200 ரூபாய் பணம் தந்துவிட்டு நகர்ந்தோம். பட்னி தாண்டிய பிறகு போலீஸ் இல்லை. இனி எல்லாமே ராணுவம்தான்.

தவி நதியின் இடதுகரையில் பயணம் செய்து பட்னி தாண்டிய பிறகு செனாப் நதியின் கரை வந்தது. சிறிது தூரம் இடக்கரை வழியாகச் சென்று சட்டென நதியின் குறுக்கே கட்டிய பாலத்தில் திரும்பி வலது கரையில் ஏறினோம். அருகே இருந்த நதி படிப்படியாக ஆழமாகிக்கொண்டே செல்வதை உணர முடிந்தது. சாலை சிறப்பாக இல்லை. ஆனால், என்னதான் தரமாக சாலை அமைத்தாலும் மூன்று மாதங்களுக்குத்தான் தாங்கும் என்கிறார்கள். கற்களும் பள்ளங்களுமாக இருந்த சாலையில் சரக்கு இல்லாத லாரியில் ஆடி அசைந்து தடதடவெனச் செல்வது மகா கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick