அன்பு வணக்கம்

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இந்த ஆண்டு, எல்லோரையும் முந்திக்கொண்டு பண்டிகைக்காலப் பரப்பரப்பை கொஞ்சம் முன்னதாகவே டாடா தொடங்கிவைக்கவிருக்கிறது. டாடா இண்டிகோ CS என்பது இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை கார். காரணம், காம்பேக்ட் செக்மென்ட் எனும் புதிய செக்மென்ட்டின் ஆரம்பப்புள்ளி இதுதான். கார் செக்மென்ட்டில் டாடா செய்த குறிப்பிடத்தக்க சாதனை இது.

லேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை வாங்கிய பிறகு, டாடா கார்களின் தரத்திலும் டிசைனிலும் பளிச் என்று பல நல்ல மாற்றங்கள். அதிலும் குறிப்பாக ஹெக்ஸா, டிகோர், டியாகோ போன்ற கார்கள், தென்கொரியா மற்றும் ஜப்பான் கார்களோடு போட்டி போடும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. டாடா மோட்டர்ஸின் கார்கள் பற்றிச் சொல்ல இப்படி ஏராளமான நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில், விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் நெக்ஸானையும் இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது டாடா.

டாடா மோட்டார்ஸிலிருந்து வெளிவரும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி, நெக்ஸான். வெளிவருவதற்கு முன்பே இது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்குக் காரணம், இதன் டிசைன்தான். கூபே போல சரிவாக இருக்கும் இதன் கூரையும், எஸ்யூவி போல இருக்கும் இதன் கம்பீரமும், கார் ஆர்வலர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்த செக்மென்ட்டில் இப்போது கோலோச்சிக்கொண்டிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் இதன் விலை, போட்டி கார்களுக்குச் சவாலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம்.

வரவிருக்கும் பண்டிகைக்காலம் கார்க்காலமாக அமையட்டும்.
 
சரக்கு மற்றும் சேவை வரி என்று குறிப்பிடப்படும் ஜிஎஸ்டி ஜூலை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. கார் வாங்க ஷோரூம் செல்லும் பலரின் முகங்களிலும் இந்தப் புதிய வரி விதிப்பு முறை, மகிழ்ச்சிப் புன்னகையைப் பூக்க வைத்திருக்கிறது. காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டியால் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்றால், எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு சுமார் 45,000 ரூபாய் அளவுக்குக்கூட ஆதாயம் கிடைக்கும். இதில் பம்பர் பிரைஸ் என்றால், அது சொகுசு கார் வாடிக்கையாளர்களுக்குத்தான்.

அதேபோல், நெடுஞ்சாலைகளில் ஆக்ட்ராய் செக்போஸ்டுகள் அகற்றுப்பட்டுவிட்டதால், அங்கே மணிக்கணக்கில் லாரி டிரைவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதனால், நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுவந்த போக்குவரத்து நெரிசலும் குறைந்திருக்கிறது. அதனால், டிரக் டிரைவர்கள் தொடங்கி, இந்தத் தொழிலில் இருக்கும் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைப் பார்க்க முடிகிறது.
இந்த ஜிஎஸ்டி அணுகுமுறை, அத்யாவசியப் பொருள்கள் அனைத்துக்கும் இருந்திருந்தால், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்.


அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick