சாலையில் கார் செல்லும்போது, டயர் பஞ்சரானால் என்ன செய்வது? | What causes car tyres to burst On Road - Motor Vikatan | மோட்டார் விகடன்

சாலையில் கார் செல்லும்போது, டயர் பஞ்சரானால் என்ன செய்வது?

பாதுகாப்பு - விழிப்பு உணர்வு

காரில் போய்க்கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாகத் திரும்பும். பின் வீல் பஞ்சரானால், உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கார் திரும்புகிறதே என்பதற்காக, நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பாதீர்கள். ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்துவிடுங்கள். காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் செய்யுங்கள்.

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக்கொண்டால்...

 ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ, ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்துவிடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

திடீரென பிரேக் பிடிக்காமல் போனால்...

 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி... படிப்படியாக கியரைக் குறையுங்கள். ஃபர்ஸ்ட் கியரில், காரைக் குறைந்த வேகத்துக்குக் கொண்டுவாருங்கள். மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடியுங்கள். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்துவிடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick