அன்று புரோகிராமர்; இன்று தலைவர்!

பெருமை - டாடா சன்ஸ்தமிழ்

க்டோபர் 24-ம் தேதி, டாடா சன்ஸ் குழுமத் தலைவரான சைரஸ் மிஸ்ட்ரி, சேர்மன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அந்த அறிக்கை வந்தது. ‘‘பிப்ரவரி 24-ம் தேதிக்குள் அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிக்கை வரும்!’’ என்பதுதான் அது.

ரத்தன் டாடாவோடு சேர்ந்த ஐந்துபேர் கொண்ட குழு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அதி தீவிரமாக இறங்கியது.

செலெக் ஷன் கமிட்டியைத் தாண்டி, டாடா டிரஸ்ட்டின் வைஸ் சேர்மன் சூனாவாலா மற்றும் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்கு உகந்த கிருஷ்ணகுமார் - இவர்களின் பெயர்தான் சேர்மன் பதவிக்கு முதலில் அதிகமாக அடிபட்டது. ஆனால், குறிப்பிட்ட அந்தத் தேதிக்கு முன்னதாகவே, டாடா சன்ஸ் குழுமத் தலைவராக, நாமக்கல்லைச் சேர்ந்த சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டு, ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் நம்பிக்கைக்கும் பாத்தியப்பட்டு விட்டார்.

ஒரே நாளில் தமிழக முதல்வர் ஆன கதை இல்லை சந்திரசேகரனுடையது. 150 வருடப் பாரம்பர்யமும், 103 பில்லியன் டாலர் மதிப்பும் கொண்ட டாடா குழுமத்தின் தலைவர் நாற்காலியில் உட்காருவது அத்தனை சுலபமானது இல்லை. ஜாகுவாரின் CEO ரால்ஃப் ஸ்பெத், ஹிந்துஸ்தான் நிறுவன எக்ஸிக்யூட்டிவ் சேர்மன் ஹரீஷ் மன்வானி, இன்னும் பல திறமை வாய்ந்த வெளிநாட்டினர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து, அந்த தலைவர் பதவிக்கு சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால், அவரது அர்ப்பணிப்பு உணர்வும் கடுமையான உழைப்பும் இருக்கிறது.

30 ஆண்டுகளாக டாடா குழும நிறுவனங்களில் பங்காற்றிய அனுபவம் உண்டு சந்திரசேகரனுக்கு. 1987-ல் டாடா நிறுவனத்தில் சாதாரண புரோகிராமராகப் பணியில் சேர்ந்தார். அதற்குப் பிறகு டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். TCS அதலபாதாளத்தில் இருந்தபோது, பல முக்கிய முடிவுகளை எடுத்து அதை மீட்டெடுத்தவர் சந்திரசேகரன்தான். TCS நிறுவனத்தில் இவர் CEO ஆகப் பணியாற்றிய பிறகுதான் அந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. அதற்குப் பிறகுதான் ரத்தன் டாடாவின் நம்பிக்கையைப் பெற்றார் சந்திரசேகரன். 

வெறும் நிர்வாகத் திறமை கொண்டவர் மட்டுமல்ல; ஒரு மராத்தான் வீரர், புகைப்படக் கலைஞர், கிரிக்கெட் வீரர், இசைப் பிரியர் என்று இன்னும் பல முகங்கள் கொண்ட சந்திரசேகரன் முன்பு பல சவால்கள் காத்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick