அன்பு வணக்கம்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

பதில் அளிக்க முடியாத சிக்கலான கேள்விகளின் பட்டியலில், புதிதாக ஒரு கேள்வி சேர்ந்துவிட்டது. ‘GST வரியால் எந்தெந்தப் பொருள்களுக்கெல்லாம் விலை கூடும்; எவற்றுக்கெல்லாம் குறையும்?’ ஆனால், ஒரு விஷயம் மட்டும் லேசாகப் புரிகிறது. எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களின் விலை நிச்சயம் குறையும். 45 முதல் 55 சதவிகிதம் வரை வரி செலுத்திவந்த சில வகை கார்களுக்கு எல்லாம், இனி 43 சதவிகித வரிதான். இது பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஜாகுவார், வால்வோ போன்ற கார் நிறுவனங்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. வரி குறைப்பால் கிடைக்கும் லாபம் எதுவானாலும், அது நியாயமாக வாடிக்கையாளர்களுக்குத்தான் சொந்தம். ஆகவே, இந்த நிறுவனங்கள் புதிய வரி விதிப்பு முறையால் கிடைக்கும் சலுகைகளை ஜூன் மாதத்திலிருந்தே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா, ஃபோர்டு, ஹோண்டா... போன்ற கார் நிறுவனங்களும் தங்களின் கார்களுக்கும் ஓரளவு வரிச் சலுகை கிடைக்கும் என்று சொல்லி, சலுகைகளை அளித்தன. ஜிஎஸ்டியால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தைவிட லாபம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் அரசு தரப்பினர். அது உண்மையாக இருக்கட்டும். 

மாருதி சுஸூகியின் ‘ஸ்விஃப்ட் டிசையர்’ வெறும் ‘டிசையராக’ வெளிவந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், காம்பேக்ட் செடான் கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பலரும், ‘பிராப்ளம் ஆஃப் பிளண்டி’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். காரணம், சில மாதங்களுக்கு முன்பு, அதாவது டிசையரின் வருகைக்கு முன்பு, ஹூண்டாயிலிருந்து எக்ஸென்ட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது. அதற்கும் முன்பு டாடாவின் டிகோர் வந்தது. இது தவிர, ஏற்கெனவே ஃபோர்டு ஆஸ்பயரும், ஃபோக்ஸ்வாகனின் ஏமியோவும், ஹோண்டாவின் அமேஸும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் விற்பனையாகிவருகின்றன.

இதில், ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. டிசையர் என்றால் பெர்ஃபாமென்ஸ். எண்ணிக்கொடுக்கும் பணத்துக்கு மதிப்பு வேண்டும் என்றால், டிகோர். யூஸர் ஃப்ரெண்ட்லியான கார் என்றால், எக்ஸென்ட். கட்டுமானத் தரத்துக்கு ஃபோக்ஸ்வாகன். இடவசதிக்கு அமேஸ், வேகத்துக்கு ஆஸ்பயர்... என்று யாருக்கு என்ன வேண்டுமோ, அதற்கு ஏற்றதுபோல கார்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

ஸ்டைலிங், உள்ளலங்காரம், இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸ், ரைடு குவாலிட்டி மற்றும் கையாளுமை, மைலேஜ்... என்று பலதரப்பட்ட கோணங்களில் இருந்தும் இந்த ஆறு கார்களை அலசி ஆராய்ந்து, ஒப்பிட்டு ஒரு கம்பேரிஸன் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம். இது, கார் வாங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்!

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick