அன்பு வணக்கம்! | Editor opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2017)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

‘ஏழு இருக்கைகள் கொண்ட பிரீமியம் எஸ்யூவி வாங்க வேண்டும்’ என்று ஆசைப்படுபவர்களுக்கு, சாய்ஸாக இருந்தவை - டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு எண்டேவர். விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்தவரை டொயோட்டா ஃபார்ச்சூனர் முன்னணியில் இருந்தாலும், விமர்சகர்களின் பார்வையில் ஜெயிப்பது ஃபோர்டு எண்டேவர்தான். மோ.வி-யின் சிறந்த எஸ்யூவிக்கான 2017-ம் ஆண்டின் விருதை வென்றதும் எண்டேவர்தான். இப்போது, இந்த 7 சீட்டர் பிரீமியம் எஸ்யூவிக்குப் போட்டியாகக் களம் இறங்கியிருக்கிறது, இசுஸூவின் MU-X.

இது, ஃபோர்டு எண்டேவரைவிட சுமார் ஏழு லட்ச ரூபாய் விலை குறைவு; டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட எட்டு லட்ச ரூபாய் குறைவு. விலைதான் குறைவே தவிர, எண்டேவரில் இருக்கும் ஆஃப் ரோடிங் திறன் மற்றும் பல வசதிகள், தனது MU-X எஸ்யூவியிலும் இருப்பதாக இசுஸூ மார்தட்டுகிறது. இசுஸூ சொல்வது எந்த அளவுக்கு உண்மை? இந்தப் போட்டியில் ஜெயிக்கப் போவது அமெரிக்காவா, ஜப்பானா என்ற கேள்விக்கான விடை, இந்த இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் கிடைக்கும்.

விடுமுறை, வேலை நாள் என்று எந்தவித பேதமும் இல்லாமல் அலுவலகத்தில் இருப்பவர்கள் சந்திக்கும் ஒரு கேள்வி உண்டென்றால், அது ‘டொயோட்டா இனோவா க்ரிஸ்டா ஆட்டோமேட்டிக் வாங்கலாமா அல்லது டாடாவின் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக் வாங்கலாமா?’ என்பது. ஹெக்ஸா அறிமுகமாவதற்கு முன்பு வரை இனோவாவுக்கு மாற்று என்பதே இல்லை. இனோவாதான் MPV மார்க்கெட்டின் முடிசூடா மன்னன். ஆனால், அதை தற்போது அசைத்துப் பார்த்திருக்கிறது எஸ்யூவியான டாடா ஹெக்ஸா.

இனோவாவைவிட ஹெக்ஸா ஐந்தரை லட்ச ரூபாய் விலை குறைவு என்பதும், டாடா தன் பழைய இமேஜில் இருந்து விடுபட்டு, புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும், வாடிக்கையாளர்கள் ஹெக்ஸா பக்கம் பார்வையைத் திருப்புவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. பார்வையைத் திருப்புவது ஓகே. ‘பணத்தைக் கொடுத்து ஹெக்ஸாவை வாங்கலாமா? இது இனோவா அளவுக்கு இருக்குமா?’ என்பது போன்ற சந்தேகங்களில் இருந்து தெளிவுபெற, இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் ஒப்பீட்டுக் கட்டுரை உங்களுக்கும் உதவும்.


அன்புடன்
ஆசிரியர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close