Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18

ளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு... களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பு அளித்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

நம் கையில் இருக்கும் செல்போன் தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூ-டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்து, வெற்றிப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் என, தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள். இதோ, இது உங்களுக்கான நேரம்.

இளமைக்கு ‘ஆ.வி’, உண்மைக்கு ‘ஜூ.வி’, பெண்மைக்கு ‘அவள்’, அறிவுக்கு ‘சுட்டி’, அருளுக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, நலத்துக்கு ‘டாக்டர்’, அறுசுவைக்கு ‘அவள் கிச்சன்’ இல்லறம் சிறக்க ‘அவள் மணமகள்’ இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூ-டியூபில் ‘விகடன் டி.வி’ என உலகின் கடைக்கோடித் தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அதைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அட்டகாசமான வாய்ப்பு.

1.7.99-க்கு முன் பிறந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2016-2017) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2017-2018) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2016-2017-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ, விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளை தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.03.17-ம் தேதிக்குள் எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்பவேண்டியது அவசியம் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல்தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து விளையாடும் சவாலான களம் இது. உற்சாகமாகக் களம் இறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

- ஆசிரியர்

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை, சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.

1) ஜல்லிக்கட்டு - பண்பாட்டு அடையாளமா, மிருகவதையா?

2) உங்கள் பார்வையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி?

3) ஆனந்த விகடனின் 'ஆண்பால் - பெண்பால் - அன்பால்' தொடர் கட்டுரையை நீங்கள் எழுதினால்...

4) மோடியின் ஆட்சியும் அவருடைய பொருளாதாரக் கொள்கையும் வேலைவாய்ப்பை உருவாக்குமா?

5) பைரவா, சென்னை-28 II, மாவீரன் கிட்டு - இவை மூன்றும் சமீபத்தில் வெளியான தமிழ் சினிமாக்கள். இந்த மூன்று படங்களில் எந்த வகையான சினிமா தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், சினிமா ரசிகர்களின் ரசனைக்கும் அவசியம் என நினைக்கிறீர்கள்? இதைப் பற்றிய உங்கள் கருத்துகளை விரிவாக எழுதுங்கள்!

6) ஜல்லிக்கட்டுக்கான மாணவர் புரட்சி, தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. உங்கள் பார்வையில் அந்தப் புரட்சி பற்றிய 3 நிமிட வீடியோ வேண்டும். வீடியோவுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி அனுப்புங்கள். அல்லது அந்த வீடியோவை உருவாக்கி you tube-ல் பதிவேற்றி அந்த லிங்க்-ஐ ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அனுப்பலாம்!

7) இணையத்தில் பரவி வரும் ட்ரோல், மீம்ஸ் கலாசாரம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? இதை நெட்டிசன்ஸ் பாசிட்டிவாகப் பயன்படுத்துகிறீர்களா அல்லது லைக்ஸுக்காக இறங்கி அடிக்கிறீர்களா? கலக உதாரணங்கள் முன்வைத்து அலசி ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள்.

8) ஏரி, குளம், கண்மாய்... உள்ளிட்ட நீர்நிலைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? உங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நீர்நிலை பற்றியும், அதன் தற்போதைய நிலை குறித்தும் எழுதவும். அந்த நீர்நிலை மூலம் பயன் பெற்றவர்களின் அனுபவங்களையும் சேர்த்து அனுப்பினால் சிறப்பு.

9) இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்... போன்ற சமூகதளங்களிலேயே தங்களின் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகின்றனர். குழந்தைகளோ வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் சேனல்... கட்டமைக்கும் உலகத்துக்குள் மூழ்கிக்கிடக்கின்றனர். இது சரியா? இதனால் ஏற்படும் பாதிப்புகள், இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள்... குறித்து ஒரு கட்டுரை தயார் செய்யுங்கள்.

(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சி-பெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, எதிர்வரும் நாட்களில், தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் தங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.

(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி./டி.வி.டி வடிவில் அனுப்ப வேண்டும். (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும்.)

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத் தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.03.17-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தகட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். இது குறித்த தகவல் தங்களுக்குக் கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும் முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

எங்களிடம் இருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மோட்டார் நியூஸ்
மலைகளின் தோழன்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”
Advertisement
[X] Close