SPY PHOTO ரகசிய கேமரா - மஹிந்திராவின் புதிய எஸ்யூவி?

ராகுல் சிவகுரு - படம்: பிரசாந்த் ஸ்ரீதரன்ஸ்பை போட்டோ - மஹிந்திரா

ரெனோ லாஜி மற்றும் மாருதி சுஸூகி எர்டிகா ஆகிய எம்பிவி-களை எதிர்கொள்ள, காம்பேக்ட் எஸ்யூவியான TUV 3OO காரை அடிப்படையாகக் கொண்டு, மஹிந்திரா தயாரிக்க இருக்கும் கார்தான் இது.  TUV 3OO காரைவிட நீளம் அதிகம். TUV 3OO-ல் இருந்த கடைசி வரிசை Jump Seat-களுக்குப் பதிலாக, மூன்று பேர் உட்காரக்கூடிய பெஞ்ச் சீட்டை இந்த கார் கொண்டிருக்கும். எஸ்யூவி டிசைனுடன் எம்பிவி வசதிகள்கொண்ட காராக இதை மஹிந்திரா பிரகடனப்படுத்த இருக்கிறது.

இந்த செக்மென்ட்டில் ஏற்கெனவே ஸைலோ இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு அது விற்பனையாகவில்லை. 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட பொலேரோ பவர் ப்ளஸ் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ள 4.2 மீட்டர் பொலேரோவின் டிமாண்ட் குறைந்துவிட்டது. எனவே, அதன் தயாரிப்பை நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் இந்த காரை மஹிந்திரா பொசிஷன் செய்ய இருக்கிறது. எனவே TUV 5OO என்ற பெயரை, இந்த காருக்கு மஹிந்திரா வைக்கக்கூடும். TUV 3OO-ல் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் இருந்த நிலையில், இதில் 1.99 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படும். ஸ்கார்ப்பியோ, XUV 5OO, ஸைலோ ஆகிய கார்களில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினின் ஷார்ட் ஸ்ட்ரோக் வெர்ஷன்தான் இது. டெல்லியில் விற்பனை செய்யப்படும் XUV 5OO-ல் 142bhp பவரையும், ஸ்கார்ப்பியோ 122bhp பவரையும் இந்த 1.99 லிட்டர் டீசல் இன்ஜின் வெளிப்படுத்துகிறது. மஹிந்திராவின் இந்தப் புதிய காரில், 122bhp பவரை வெளிப்படுத்தும் 1.99 லிட்டர் இன்ஜின் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். சென்னை GST நெடுஞ்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டிருந்த இந்த காரின் ஸ்பை படங்களை எடுத்துள்ளார், மோட்டார் விகடன் வாசகரான பிரசாந்த் ஸ்ரீதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick