“இயந்திரத்துக்கும் உணர்வுகள் உண்டு!”

வி.ஐ.பி பேட்டி - ராயல் என்ஃபீல்டுஇரா.கலைச்செல்வன் - படங்கள் : ப.சரவணகுமார்

சென்னை பம்மலில் இருக்கும் அந்த வீடு கலைக்கூடம் போலக் காட்சியளிக்கிறது. கையில் இருந்த பழைய உளி, பாதி செய்யப்பட்ட மரச்சிற்பம் சகிதமாக வாசலில் நின்றிருந்தவரிடம் விசாரித்தபோது, ‘‘வாங்க...வாங்க... நான்தான் சிவக்குமார்’’ என்று தன்னை அறிமுகப்படுத்தியபடி வரவேற்றார். இவர், இன்றைக்கு இந்தியச் சாலைகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிசைன் குழுவின் தலைவர், சிவக்குமார்.

நம்முடைய பார்வையிலேயே முதல் கேள்வியைப் புரிந்துகொண்டவர், ‘‘என்னோட சொந்த ஊர் திருவாரூர் பக்கம் சிக்கல். ஸ்தபதி குடும்பம். பரம்பரை பரம்பரையாகக் கோயில்கள் கட்டுவது, சிற்பங்கள் செய்வதுதான் எங்கள் தொழில். நான்தான் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, டிசைனிங் துறைக்கு வந்துவிட்டேன்’’ என்று சொல்லியபடி சிரித்தார். மிக சகஜமாக தொடங்கியது உரையாடல்...

‘‘என் குடும்பப் பின்னணியின் காரணமாக இயல்பிலேயே எனக்கு டிசைனிங் மீது ஆர்வம்... அதுவுமில்லாமல் சின்ன வயதில் இருந்தே ஆட்டோமொபைல் துறை மீதான ஈடுபாடு - இவை இரண்டும் சேர்ந்துதான் என்னை இந்தத் துறைக்குள் இழுத்துவந்தது. சென்னை அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, திருவண்ணா மலையில் உள்ள கல்லூரியில் பொறியியல் பயின்று, டெல்லி ஐஐடி-யில் உயர் கல்வியை முடித்தேன். 2001-ல் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் ஹீரோ ஹோண்டா பைக்குகளின் டிசைன் எல்லாமே, ஹோண்டா நிறுவனத்தின் ஜப்பான் ஸ்டூடியோவில் இருந்துதான் வரும். நான்தான் முதன்முதலாக ஹீரோ ஹோண்டாவுக்கான தனி டிசைனிங் ஸ்டூடியோவை டெல்லியில் ஆரம்பித்தேன். சில ஆண்டு பயணங்களுக்குப் பிறகு... 2005-ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் சேர்ந்தேன்.’’

‘‘அந்தச் சமயத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் இருந்ததே? இதை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?’’

‘‘உண்மைதான். அந்தச் சமயத்தில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்தது ஹீரோ ஹோண்டா. பலரும் என்னை ராயல் என்ஃபீல்டில் சேர வேண்டாம் என்றே அறிவுறுத்தினார்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி, இந்த நிறுவனத்தில் என் வேலைக்கான இடம் இருப்பதாகவே நான் நம்பினேன்.

ஒரு மோட்டார் பைக்கை டிசைன் செய்வதில் இரண்டு விஷயங்கள் முக்கியம். அவை எமோஷனல் கோஷன்ட் (Emotional Quotient) மற்றும் ரேஷனல் கோஷன்ட் (Rational Quotient). ரேஷனல் கோஷன்ட் என்று சொல்லும்போது, ஒரு வாகனத்தின் தொழில்நுட்பங்களைக் கண்டு, அந்த வாகனத்துடன் பகுத்தறிவின் அடிப்படையில் நமக்கு ஏற்படும் உறவு. மற்றொன்று, எமோஷனல் கோஷன்ட். இது, ஒரு வாகனத்தின் மீதான உணர்வு சார்ந்த உறவு. ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்கு அறிவு சார்ந்த உறவு இருக்கும் அதே சமயத்தில், உணர்வு சார்ந்த உறவே மேலோங்கி இருக்கும். அப்படியான பைக்குகளை டிசைன் செய்வது எனக்குப் பிடித்திருந்தது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick