அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ஒரே கார் திரும்பத் திரும்ப ‘மோட்டார் விகடன்’ அட்டையை அலங்கரிப்பது என்பது எல்லா கார்களுக்கும் நிகழாது. ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் கார்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், டாடா நானோவுக்கு அடுத்தபடியாக அதிகமுறை ‘மோட்டார் விகடன்’ அட்டையை அலங்கரித்த கார் என்ற பெருமை, ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்கு உண்டு. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் என்ற ஒரு புதிய செக்மென்ட் உதயமாவதற்குக் காரணமாக இருந்ததும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தான். நான்கு மீட்டருக்கு உட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி என்பதால், இதன் அறிமுக விலை ஆச்சர்யம் அளிக்கக்கூடிய வகையில் கவர்ச்சிகரமாக இருந்தது. அறிமுகமானபோது அந்த ஆண்டின் சிறந்த காராகவும்/எஸ்யூவி-யாகவும் பல ஆட்டோமொபைல் பத்திரிகைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

‘இடம் போதுமானதாக இல்லை; விலை குறைந்த வேரியன்ட் உடனடியாகக் கிடைக்கவில்லை’ என்பதுபோன்ற ஒரு சில குறைகளாலும், அதிகரித்த போட்டிகளாலும், இடையில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் மீது விளம்பர வெளிச்சம் அவ்வளவாகப் படாமலேயே இருந்தது. ஆனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவைக் களம் இறக்கியபோது, ஃபோர்டு எக்கோஸ்போர்ட் தடாலடியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலைகுறைப்பு செய்து மீண்டும் கவனம் ஈர்த்தது.

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மீண்டும் இப்போது ஆட்டோமொபைல் இதழ்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஆம், புதிய எக்கோஸ்போர்ட் வரவிருக்கிறது. அதில், இன்னொரு முக்கியச் செய்தியும் அடங்கியிருக்கிறது. இந்தப் புதிய எக்கோஸ்போர்ட்டை இயக்கப்போவது ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய பெட்ரோல் இன்ஜின். உலகம் முழுதும் இந்த இன்ஜின் ஏற்றுமதியாகும் என்றாலும், இந்த இன்ஜின் தயாராகப் போவது நம் நாட்டில்! அதனால், இதன் உற்பத்திச் செலவு நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.

டிராகன் செலுத்தவிருக்கும் புதிய ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், உங்கள் மனதில் தோன்றும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick