அன்பு வணக்கம் | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

அன்பு வணக்கம்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

புதிதாக கார் வாங்குவது என்று முடிவெடுக்கும் வேளை... பல கேள்விகள் எழும். இதில் சுற்றியடிக்கும் முக்கியமான ஒரு கேள்வியும் உண்டு. அதாவது, வாங்க நினைக்கும் காரின் டாப்-எண்ட் வேரியன்ட்டை வாங்குவதா அல்லது அதே விலைக்கு, அதைவிட ஒரு படி மேலே உள்ள மாடலின் லோ-எண்ட் வேரியன்ட் வாங்குவதா?  ‘பெரிய காராகவே வாங்கிவிடலாமே!’ என்று மனம் ஒரு கணம் முடிவெடுக்கும்; அடுத்த கணமே, ‘கார் கொஞ்சம் சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அத்தனை வசதிகளும் வேண்டும்’ என்று மாற்றி யோசிக்கும். ‘பெரிய சைஸா... அதிக சிறப்பம்சங்களா?’ என்று மனம் பெண்டுலம் போல முடிவே இல்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்கும்.

இக்னீஸின் ஹை-எண்ட் வேரியன்ட்டா அல்லது ஸ்விஃப்ட்டின் லோ-எண்ட் வேரியன்ட்டா? ஸ்விஃப்ட்டின் ஹை-எண்ட் வேரியன்ட்டா அல்லது பெலினோவின் லோ-எண்ட் வேரியன்ட்டா? இது முடிவே இல்லாத ஒரு சங்கிலி. மாருதி ஆல்ட்டோவில் தொடங்கி, ஆடி R8 வரை நீண்டுகொண்டே இருக்கும்.

வாசகர்களின் இந்தக் குழப்பத்துக்கு என்னதான் தீர்வு? ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய இரண்டு கார்களையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு, இந்தக் கேள்வியை அணுகியிருக்கிறோம்.

ஒருவருக்கு குறைவான ரன்னிங் காஸ்ட் மற்றும் அதிக வசதிகள் முக்கியம் என்றால், ஹோண்டா சிட்டி ZX வேரியன்ட் சரியான தேர்வாக இருக்கும். ‘வசதிகள் அவசியமில்லை, கூடுதல் பெர்ஃபாமென்ஸும் இடவசதியும் - பெரிய கார் வைத்திருக்கிறேன் என்கிற பெருமையுமே போதும்’ என்றால், அவருடைய சாய்ஸ் ஹூண்டாய் எலான்ட்ரா SMT. ஒருவேளை புதிய காரை மாதத் தவணையில் வாங்குகிறார் என்றால், சாய்ஸ் மாறுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஹூண்டாய் வெர்னா என்பது புதிய கார் கிடையாது; நம் நாட்டில் மட்டும் மூன்று லட்சத்தைக் கடந்து விற்பனையாகிக்கொண்டிருக்கும் கார். மிட்- சைஸ் செக்மென்ட்டின் தலையாக ஒரு சமயம் ஹோண்டா சிட்டி இருக்கும். சிட்டி தடுமாறும்போது வெர்னா தலை தூக்கும். சியாஸ் சீறும்போது மற்ற இரண்டும் பின்வாங்கும். இந்தச் சுழற்சியின் அடுத்த நகர்வு இப்போது நிகழ்ந்திருக்கிறது. ஐந்தாம் தலைமுறை வெர்னா அறிமுகமாகியிருக்கிறது. வெர்னாவின் வருகை சிட்டி மற்றும் சியாஸின் விற்பனையில் மாறுதல்களை நிகழ்த்துமா? அப்படி நிகழ்த்துமளவுக்கு ஐந்தாம் தலைமுறை வெர்னாவாக அவதரித்துது வந்திருக்கும் இந்த நியூ ஜென் வெர்னாவில் மாறுதல்கள் நிகழ்ந்திருக்கிறதா? கேள்விகளுக்கான விடைகள் உள்ளே இருக்கும் கட்டுரைகளில்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick