அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ஆட்டோமொபைல் உலகில் அபூர்வமான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஃபோர்டு, மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து வேலை செய்வது என்று முடிவெடுத்திருக்கின்றன. இந்தப் புதிய கூட்டணியால் வாடிக்கையாளர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு மலர்ந்திருக்கிறது.

 ஃபிகோ, ஈகோஸ்போர்ட், ஆஸ்பயர், என்டேவர்.... என்று ஃபோர்டு இந்தியச் சந்தையில் ஒவ்வொரு செக்மென்டிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பயணிகள் கார் சந்தையில் ஃபோர்டு வசம் இருப்பது வெறும் ஐந்து சதவிகிதம்தான். அதனால், உள்நாட்டில் வேர் பரப்பவும் கிளைகள் திறக்கவும் ஃபோர்டுக்கு மஹிந்திராவின் துணை இப்போது எப்போதும் இல்லாத அளவுக்குத் தேவைப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில், மஹிந்திரா தீவிரமாக பல ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் செய்துவருகிறது. உலகம் முழுதும் அறியப்பட்ட ரேவா கார் நிறுவனமும் இப்போது மஹிந்திரா வசம்தான். வருங்கால கார் மார்க்கெட் என்பது எலெக்ட்ரிக்/ஹைபிரிட் கார் மார்க்கெட் என்பதும் மஹிந்திராவுடன் ஃபோர்டு இணைய ஒரு காரணம்.

மஹிந்திராவுக்கும் ஃபோர்டின் சர்வதேச சந்தை தேவைப்படுகிறது. தன்னுடைய எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை உலகம் முழுதும் கொண்டுசேர்க்க வேண்டுமானால், அதற்கு ஃபோர்டின் சர்வதேச சந்தையில் இருக்கும் மதிப்பும் பலமும் முக்கியம்.

ஆகையால், மஹிந்திராவுக்கும் ஃபோர்டுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாடு, சரியான வேகத்திலும் திசையிலும் செல்லுமேயானால்... கூட்டறிக்கையில் அவர்கள் சொல்லியிருப்பது மாதிரி, கூடியவிரைவிலேயே காம்பேக்ட் எஸ்யூவி, மிட் சைஸ் எஸ்யூவி, எலெக்ட்ரிக் கார்... என்று அடுத்தடுத்து பல புதிய கார்கள் நமக்குக் கிடைக்கும். இவர்களின் கூட்டணியில் வெளிவருவது என்ன காராக இருந்தாலும், இவை ஃபோர்டு மற்றும் மஹிந்திரா லோகோவோடு தனித் தனி கார்களாகவே விற்பனைக்கு வரும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியாவே இருக்கும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1998-ம் ஆண்டு ஃபோர்டு இந்தியாவுக்கு வந்தபோது, மஹிந்திராவுடன் கைகோத்துக்கொண்டுதான் வந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் பெயரே ‘மஹிந்திரா ஃபோர்டு இந்தியா’ என்பதுதான். அப்போது இருந்த சட்ட திட்டத்தின்படி ஃபோர்டுக்கு 49 சதவிகிதமும் மஹிந்திராவுக்கு 51 சதவிகிதமும் பங்குகள் இருந்தன. பொருளாதார மற்றும் சர்வதேச மாற்றங்களால், அப்போது அந்தக் கூட்டணி நிலைக்கவில்லை. ஆனால், இப்போது ஏற்பட்டிருப்பது ஒட்டுவேலையல்ல. ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் எந்த வகையிலும் இவர்களை நிர்பந்தம் செய்யாது என்பதால், முன்பைவிடவும் இரு நிறுவனங்களும் இயந்து பணியாற்றவும் அதன் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு பறிமாறவும் இப்போது வாய்ப்புகள் கூடியிருக்கின்றன. அதனால், இந்தக் கூட்டணியை மனதார வரவேற்போம்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick