அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்ட உணர்வு பலருக்கு வந்துவிட்டது. காரணம், தீபாவளிக்கு முன்பாகவே பல புதிய கார்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அதைவிட அதிக எண்ணிக்கையில் பல புதிய கார்களும் பைக்குகளும் விற்பனைக்கு வரக் காத்திருக்கின்றன. இந்தத் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முக்கிய கார்களில் முன்னணியில் இருப்பது மஹிந்திரா அறிமுகப்படுத்தியிருக்கும் மராத்ஸோ. டொயோட்டா இனோவாவைவிட பத்து லட்ச ரூபாய் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரின் இன்ஜின் புதிது. உற்பத்தி செய்யபப்டும் ப்ளாட்ஃபார்மும் புதிது. அதனால் இதற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மாஸ் மார்க்கெட்டைக் குறிவைத்து ஹூண்டாய் கொண்டு வரப்போகும் கார் AH2. இது ரகசியக் குறியீடுதான். விற்பனைக்கு வரும்போது இதன் பெயர் ‘சான்ட்ரோ'வாக இருக்கும். ஹூண்டாய் நம் நாட்டு மக்களின் மனதில் இடம் பிடிக்க அடிக்கல் நாட்டியதே சான்ட்ரோதான். நம் நாட்டில் விற்பனைக்கு வந்த பிரபலமான டால் பாய் டிசைன் காரும் இதுதான். அதனால் சான்ட்ரோவுக்கு என மக்களிடையே ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதனால் இந்த காரும் தீபாவளிக்குச் சரவெடியைக் கொளுத்தக்கூடும்.

இதற்கு அடுத்து தீபாவளி கொண்டாடப் போகும் கார், புதிதாக வரவிருக்கும் ஹோண்டா CR-V. இது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் கார்தான் என்றாலும், இப்போது அறிமுகமாக இருப்பது ஐந்தாம் தலைமுறை CR-V. இதில் டீசல் இன்ஜின் வேரியன்ட் புத்தம் புதிது. பெட்ரோல் வேரியன்ட்டில் 5 சீட் என்றால், டீசல் வேரியன்ட்டில் 7 சீட். 2 வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்று ஏகப்பட்ட ஆப்ஷன்களோடு களமிறங்கப்போகும் இதன் விலை சுமார் 30 லட்சத்துக்கு மேல் என்றாலும், ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர் ஆகியவற்றுக்கு மாற்றாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சாய்ஸ் கிடைக்கவிருக்கிறது.

ஃபோர்ட் ஆஸ்பயர் பிரமாதமாக விற்பனையாகும் கார் இல்லை என்றாலும், ஃபோர்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கார்களில் முக்கியமானது இது. புதிய 1.2 டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நவீனமான டச் ஸ்கீரின் சிஸ்டம் ஆகியவற்றுடன் வரவிருக்கிறது ஆஸ்பயர். ஃபேஸ்லிஃப்ட் என்பதால், தோற்றத்திலும் புதுமைகள் இருக்கலாம்.

மஹிந்திராவின் புதிய ப்ரீமியம் எஸ்யூவி (Y400), மாருதியின் புதிய மைக்ரோ எஸ்யூவி, இரண்டாம் தலைமுறை எர்டிகா, டட்ஸன் கோ மற்றும் கோ ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட், ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட் லைன் ஆகிய கார்கள் அறிமுகமாகி, இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் குதூகலமானதாக மாற்ற இருக்கின்றன.

அன்புடன்

ஆசிரியர்

[X] Close

[X] Close