அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது’...  ‘ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்’... ‘ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கே உலை வைக்கக்கூடியது!’ என்று தெருமுனையில் நிற்கும் போலீஸ் துவங்கி, ஆட்சியாளர்கள், நீதிமன்றம், மருத்துவர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் கோணங்களில் இருந்து இதைப் பலமுறை சொல்லிவிட்டார்கள்; மிரட்டிவிட்டார்கள்; பயமுறுத்திவிட்டார்கள். ஆனாலும், இதையெல்லாம் பெரிதாக பலரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது வீதியில் இறங்கி ஒரு அரைமணி நேரம் நின்றாலே புலப்பட்டுவிடும்.

இந்தச் சூழ்நிலையில்தான், மோட்டார் வாகனச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, ‘இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர் மட்டுமல்ல, பைக்கின் பின்னிருக்கையில் உட்கார்ந்து செல்லும் நபரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்ற சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

பைக் வெறியர்களாக இருக்கும் ரேஸ் வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். எந்த ரேஸ் வீரராவது ஹெல்மெட் அணியாமல் ரேஸ் டிராக்கில் வாகனம் ஓட்டி யாராவது பார்த்ததுண்டா? ‘‘மணிக்கு 140, 150 கி.மீ வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ரேஸ் டிராக்கில் பைக் அல்லது கார் ஓட்டுவதைவிட, சாதாரண சாலைகளில் வாகனம் ஓட்டுவதில்தான் ரிஸ்க் அதிகம்” என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தாலும், அது இன்னும்கூட பலருக்குக் கேட்கவில்லை.

உயர்நீதிமன்றம் இப்போது இட்டிருக்கும் கட்டளை முக்கியத்துவம் பெறுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவாக, இருசக்கர வாகனத்தைச் செலுத்தும்போது எப்போது வேகத்தை கூட்டப்போகிறோம்; எப்போது பிரேக் போடப் போகிறோம் என்பது வாகனத்தை ஓட்டுகிறவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், பின்னால் இருக்கும் பில்லியன் ரைடர்களுக்கு இது எதுவும் தெரியாது. வேகத்தை திடுதிப்பென்று கூட்டினாலும் சரி, சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினாலும் சரி... பில்லியன் ரைடருக்கு இது எதிர்பாராததாகவே இருக்கும். ஆகையால், வேகத்தைத் திடீரென்று கூட்டினாலும் சரி, சடன் பிரேக் போட்டாலும் சரி... வேகமாகச் செல்லும் பைக்கில் இருந்து பேலன்ஸ் தவறி கீழே விழுகிற வாய்ப்பு பில்லியன் ரைடர்களுக்குத்தான் அதிகம். ஆகையால்தான் பில்லியன் ரைடர்களுக்கு ஹெல்மெட் அவசியம். அவசியம். அவசியம்.

‘ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி கொட்டிவிடும். தலை வலிக்கும்’ என்பதுபோன்ற காரணங்களைச் சொல்லாமல் நம் பாதுகாப்பை நாம் முதலில் உறுதி செய்வோம்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்