அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

‘என்னதான் கெட்ட செய்தியாக இருந்தாலும், அதில் ஒரு நன்மை இருக்கும்'  என்பார்கள். இது கார் மற்றும் பைக் உலகுக்கும் பொருந்தும். கடந்த பல மாதங்களாகவே மந்தமாக இருந்த கார் மற்றும் பைக் விற்பனை, கடந்த சில வாரங்களாக தேக்க நிலை என்பதைத் தாண்டிச் சடாரெனக் குறையவும் செய்திருக்கிறது. இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். ஆனால் கண்முன்னே தெரியும் காரணம் BS-VI. பயணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தித் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் பைக்குகள் மட்டுமே ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் என்பதால், ‘வாங்கறது வாங்கறோம். பாதுகாப்பான வண்டியா வாங்கிடலாமே!' என்று வாடிக்கையாளர்கள் சற்றே காத்திருந்தார்கள் என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது இனி வரும் காலம், உண்மையிலேயே ‘கார்' காலமாக இருக்கும். அதிலும் தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் பணத்தை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கல்கள், தேர்தல் முடிந்துவிட்டால் அகன்றுவிடும். அதாவது தேர்தலுக்குப் பிறகு, கார் மற்றும் பைக் விற்பனை டாப் கியருக்குத் தாவும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைத்த வாடிக்கையாளர்களுக்கு, இந்த இடைப்பட்டக் காலத்தில் கணிசமான தள்ளுபடி கிடைத்தது. ஆக எப்படிப் பார்த்தாலும், வாடிக்கையாளர்களுக்கு இந்தக் காலம் நல்லபடியாகவே அமைந்திருக்கிறது. வரப்போகும் காலமும் பிரகாசமாகவே காட்சியளிக்கிறது. ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட் மற்றும் யமஹா MT-15 விற்பனைக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, மேலும் பல புதிய வேரியன்ட்களும் மாடல்களும் விற்பனைக்கு வரவிருக்கின்றன. ஜெனிவா மோட்டார் ஷோவின் கவரேஜைப் படியுங்கள். புரியும்.

இந்தத் தருணத்தில் மைலேஜ், பெர்ஃபாமென்ஸ், கையாளுமை, விலை என்று பலவிதமான அளவுகோல்களின் அடிப்படையில் முக்கியமான இரண்டு ஒப்பீடுகளைக் கொடுத்திருக்கிறோம். முதல் ரிப்போர்ட்டில் ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா ஆல்ட்டுராஸ் G4, டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுஸூ MU-X இடம்பெற்றிருக்கிறது. அடுத்த ரிப்போர்ட்டில் டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV 5OO ஆகியவற்றுக்கு இடையேயான சாதக பாதகங்களைக் கொடுத்திருக்கிறோம்.

புதிதாக என்ன எஸ்யூவி வாங்க வேண்டும் என்று முடிவெடுக்க, நிச்சயம் உங்களுக்கு இந்த இரண்டு ஒப்பீடுகளும் துணை புரியும் என நம்புகிறோம்.

அன்புடன்

ஆசிரியர்