அன்பு வணக்கம்! | Editorial page - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

டந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார் விற்பனை மந்த கதியில் இருப்பதாக ஆட்டோமொபைல் உலகம் கவலை தெரிவிக்கிறது. எரிபொருள் விலை, இன்ஷூரன்ஸ் பிரிமியம், கடன் வட்டி விகிதம் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிலை இனி நீடிக்கப்போவதில்லை. தேர்தல் முடிவுகள் அரசுக்கு வலிமையும், ஐந்து ஆண்டு ஆயுளையும் சேர்த்திருப்பதால், நாட்டின் பொருளாதாரத்துக்குப் புது ரத்தம் பாய்ந்திருக்கிறது. தொழில்துறையினர் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.

இந்த நம்பிக்கையின் சான்றாக, சரசரவென்று பல புதிய கார்களும் பைக்குகளும் அணிவகுத்து வருவது, கண்கொள்ளாக்காட்சியாக இருக்கப்போகிறது என்பது நிச்சயம். இந்தப் புதிய துவக்கத்தின் முதல் புள்ளியாக ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ விற்பனைக்கு வந்துவிட்டது. அதுவும் ரூ.6.5 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதே ஒரு திருவிழாக் கொண்டாட்டத்துக்கான மனநிலையைக் கொண்டுவந்துவிடுகிறது. அதேபோல சமீபத்தில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா XUV300 மிகக்குறுகிய காலத்தில் மிகப் பெரிய விற்பனை இலக்கைக் கடந்திருக்கிறது. இதே வேகத்தில் MG ஹெக்டர், கியா SP கான்செப்ட், டொயோட்டா கிளான்ஸா, ரெனோ ட்ரைபர், ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் என்று புது கார்களின் பவனி தூள் கிளப்பயிருக்கிறது.

அதேபோல பைக் சந்தையும் பரபரப்பாக இருக்கிறது. சுஸூகி ஜிக்ஸர் SF150/250, டிவிஎஸ் அப்பாச்சி RR310, ஹீரோ எக்ஸ்பல்ஸ்200/200T, எக்ஸ்ட்ரீம் 200S, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 என்று வாடிக்கையாளர்களை வசப்படுத்த வரிசையாக பல புதிய பைக்குகள் களம் காண்கின்றன.

ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ப்ளெஷர் ப்ளஸ் ஆகியவை விற்பனைக்கு வந்து வேகம் காட்டுகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களான ஏத்தர், ரிவோல்ட் மற்றும் அல்ட்ரா வயலெட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கடை விரிக்கப் போகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இப்படி எட்டுத்திக்கும் தித்திக்கும் செய்திகளாகவே வருவதால்... வாடிக்கையாளர்களுக்குப் புதிய வாகனங்கள் கச்சிதமான விலையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்

ஆசிரியர்