நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17 | CLASS - A SURFACING - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சர்ஃபேஸும்... அலியாஸும்

CLASS - A SURFACING என்பதை கார் வடிவமைப்பின் கிரீடம் என்பார்கள். கவர்ச்சியாக களிமண்ணில் செதுக்கிய கார் வடிவத்தை, அழகான காராக மாற்றித்தரும் மாயாஜாலம்தான் CLASS - A SURFACING. கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் பளபளக்கும் மாசு மருவற்ற காரின் புறப்பரப்புகள், கண்ணாடியைப் போன்று தெளிவாகவும், ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று வளைவு நெளிவாகவும், பளிச்சென்று பொலிவாகவும் இருக்க... தரமான சர்ஃபேஸிங் தான்(SURFACING) காரணம். இதை டிசைன் பிராஸஸின் இறுதிக்கட்டம் அல்லது உச்சக்கட்டம் என்று சொல்லலாம்.

Class - A (Surface) பரப்பு என்பது என்ன? Surface என்றால் பரப்பு. பரப்பு ஏரியா (Surface Area) என்பது நீளமும் அகலமும் கொண்டது. ஆனால், கணமற்றது; அதாவது, Thickness அற்றது. உதாரணமாக, நீங்கள் ஒரு மேசையில் அமர்ந்திருப்பதாக எடுத்துக் கொண்டால், மேசையின் மேற்பகுதிதான் பரப்பு என்கிற Surface. அதிலும் நாம் பார்த்து, தொட்டுப் பயன்படுத்தும் அனைத்துப் பரப்புகளும் ‘Class - A’ பரப்பு. டேபிளின் டிராயரும் கைப்பிடியும் Class- A. பார்வையில் படாது மறைந்திருக்கும் மேசையின் அடிப்பகுதியை ‘Class-B’ பரப்பு எனச் சொல்லலாம்.  மேசையின் பயன்பாட்டுப் பரப்பு ஏன் பளப்பளப்பாக, நேர்த்தியாக இழைத்து வார்னீஷ் அடிக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்தால், பல எளிய உண்மைகள் விளங்கும். மரப் பட்டறையில் வாளால் அறுக்கப்பட்ட மரத்துண்டுகளை இழைக்காமல் மேசை, நாற்காலி செய்தால், கூர்மையான வாள் தடங்கள் கைகளைக் கிழித்துவிடலாம்; தூசு தங்கிவிடும். திரவங்கள் கைதவறிச் சிந்தினால், வழிய முடியாமல் ஈரமாகவே இருக்கும். ஆகவே, வழவழப்பான பரப்பு தேவைப்படுகிறது. நல்ல பயன் தருவதற்காகவே, இழைத்து இழைத்து மேடு பள்ளங்கள் இல்லாத பரப்பை தனித்துவமான திறமை கொண்டு படைக்கிறோம்.  ஆட்டோமொபைலில் இதுதான் வேறுவிதத்தில் கம்ப்யூட்டரின் உதவியுடன் நடக்கிறது. அதுதான் Class - A  Surfacing.