Published:Updated:

கத்ரி கோபால்நாத்... ஈடுசெய்யவியலா இழப்பு..!

பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

சாக்ஸோஃபோன்... நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பெயர் தெரியும் அல்லது நினைவிலிருக்கும் என்பது தெரியாது. டூயட் படத்தின் அஞ்சலி.. அஞ்சலி… பாடலை உதடுகள் ஹம்மிங் செய்யும்போதெல்லாம் மனதுக்குள் அந்தரங்கமாக ஒலித்துக் கொண்டிருப்பது சாக்ஸோஃபோன் இசைதான். ஒவ்வொரு முறை பாடலைக் கேட்கும்போதும் காதலில் திளைக்கும் நெஞ்சங்கள் மெய்மறந்து ஆன்மாவைத் தழுவி நிற்கும். டூயட் படத்தின் டைட்டில் கார்டில் வரும் இசை சாக்ஸோஃபோனில் அந்தக் கலைஞன் செய்த மேஜிக்கின் உச்சம். அந்த சாக்ஸ் கலைஞனின் பெயர் கத்ரி கோபால்நாத்.

கத்ரி கோபால்நாத். | KadriGopalNath
கத்ரி கோபால்நாத். | KadriGopalNath
`இசைத்துறைக்கு பெரும் இழப்பு!’ - சாக்ஸபோன் கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்!

மங்களூரில் உள்ள கத்ரி என்னும் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1949-ல் பிறந்தார் கத்ரி கோபால்நாத். அப்பா, நாகஸ்வர கலைஞராக இருந்தார். அப்பாவிடம் நாகஸ்வரத்தைத் தொடக்கத்தில் கற்றுக்கொண்டார். மைசூர் அரண்மனையில் முதன்முதலாக சாக்ஸோஃபோன் இசையைக் கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டார். சாக்ஸோஃபோன் நாதத்தை முதன்முதலாக கேட்டதும், பூர்வ ஜென்மத்தில் அந்த இசையோடு சம்பந்தம் உள்ளதைப் போல உணர்ந்ததாக நெகிழ்ந்து நேர்காணல்களில் கூறியுள்ளார். சாக்ஸோஃபோன் வாங்க முடியாத குடும்பச் சூழ்நிலையில், வீட்டில் சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தி இசைக்கருவியை வாங்கி நாகஸ்வரத்தில் கற்றுக்கொண்டதை வைத்து பயிற்சியைத் தொடங்கினார். புல்லாங்குழல் கலைஞர் கோபால கிருஷ்ணன் ஐயர் மற்றும் மிருதங்க கலைஞர் டிவி.கோபாலகிருஷ்ணன் மற்றும் கோபால கிருஷ்ண பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றுள்ளார்.

உலகத்தின் பல நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார். இசைக் கச்சேரிகளின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அறிமுகமானார். இருவரும் இணையும் அடுத்த படத்தில் கத்ரி கோபால்நாத்தும் இணைந்தார். அந்தப் படத்தின் பெயர் `டூயட்’. படம் முழுவதும் சாக்ஸோஃபோனின் இசை நிறைந்து கிடக்கும். இதை தமிழர்களுக்கு சாக்ஸோஃபோனை அறிமுகப்படுத்திய படம் என்றே கூறலாம். அறிமுகமான பொழுதில் பெயர் தெரியாத அந்த இசைக்கருவியின் இசைக்கு இசையாத மனங்களே இருக்க முடியாது. மேற்கத்திய இசைக்கருவியில் கர்னாடக சங்கீதத்தை வாசித்து அதில் சாதித்தும் காட்டியவர் கத்ரி கோபால்நாத். பத்ம ஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸோஃபோன் சாம்ராட், சங்கீத கலாசிகாமணி போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இசை விமர்சகர் சாஜி
இசை விமர்சகர் சாஜி

கத்ரி கோபால்நாத் குறித்து இசை விமர்சகர் சாஜி, "சாக்ஸோஃபோன் என்பது வாசிப்பதற்கு கடினமான இசைக்கருவி. நம்மைப் போன்ற ஆட்கள் வாசித்தால் வெறும் காற்று மட்டும்தான் வரும். சாக்ஸோஃபோனிலிருந்து நாதத்தை வெளிக்கொண்டு வருவதற்கே கடுமையான பயிற்சிகள் வேண்டும். மேற்கத்திய நாடுகளின் செவ்வியல் இசைக்கும் வெகுஜன இசைக்கும் இடையில் உருவான பல இசை வடிவங்களில் முக்கியமான ஒன்று ஜாஸ். அடிப்படையில் சாக்ஸோஃபோன் ஜாஸ் வடிவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இசைக்கருவி. இந்தக் கருவியை வைத்து இந்தியாவில் கர்னாடிக் இசையை வாசித்தார் என்பதுதான் அவருடைய சாதனை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் சினிமா பாடல்களை சாக்ஸோஃபோனில் வாசிப்பதே மிகவும் கடினம். சின்ன சின்ன நோட்ஸ் எல்லாம் இதில் வாசிப்பது கடினம். மேற்கத்திய இசை ஒரு நோட்டிற்கு அடுத்த நோட்.. அடுத்த நோட்.. என்று செல்லும், அந்த நோட்களின் முன்னும் பின்னுமான ஒருங்கிணைப்பு. கர்னாடிக் இசை இரண்டு நோட்டுகளின் நடுவில்தான். அதில் இருக்கும் குட்டி குட்டி நோட்ஸ்கள் சாக்ஸோஃபோனில் இல்லவே இல்லை. தொடர்ந்து பயிற்சி செய்யும் ஒரு மேதையால் அதை வாசிக்க முடியும். அந்த வகையில் கர்னாடிக் இசையை சாக்ஸில் வாசிக்க முதன்முதலாக முன்னெடுத்தவர், அதில் உச்சத்தைத் தொட்டவர். சாக்ஸோஃபோனில் கர்னாடிக் இசையை வாசிக்கக்கூடியவர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கத்ரி கோபால்நாத்தான். அதுதான் அவருடைய இடம் என்று நினைக்கிறேன்.

கத்ரி கோபால்நாத்
கத்ரி கோபால்நாத்
``என்னை `கொலைகாரப் பாவி'ன்னார் இளையராஜா!" - மிஷ்கின் ஷேரிங்ஸ்

ஒரு சில ரெக்கார்டிங்கில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நெருங்கிய உறவு எதுவும் அவருடன் ஏற்படவில்லை. இசை ஆர்வலராக அவருடைய சாதனையாக ஒன்றைக் கருதுகிறேன். கத்ரி ஸ்டைலில் வாசிக்கலாம் என்றுதான் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சாக்ஸோஃபோனை பயன்படுத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு