நாணயம் லைப்ரரி: அலிபாபாவின் உலகம்!

புத்தகத்தின் பெயர் – அலிபாபாஸ் வேர்ல்டு (Alibaba’s world)

ஆசிரியர் – போர்ட்டர் எரிஸ்மேன் (Porter Erisman)

பதிப்பாளர் – மேக்மில்லன்

மெரிக்காவின் அமேஸானுக்கு இணையாகப் பேசப்படும் சீன `ஆன்லைன்’ வர்த்தக நிறுவனம் அலிபாபா.காம். இதைப் பதினேழு பேருடன் சேர்ந்து 1998-ம் ஆண்டு ஹாங்செள (Hangzhou) என்கிற இடத்தில் ஆரம்பித்தவர், பள்ளிக் கூடத்தில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்துவந்த ஜாக் மா. இன்றைக்கு இந்த நிறுவனத்தின் வருமானம் கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர்கள். 2014-ம் ஆண்டு ஐபிஓ மூலம் 25 பில்லியன் டாலர்கள் திரட்டியது. இது ஐபிஓ வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனை.

இந்த நிறுவனம் குறித்து அதில் துணைத் தலைவராக 2000-லிருந்து 2008-ம் ஆண்டு வரை வேலை பார்த்துவந்த போர்ட்டர் எரிஸ்மேன் (Porter Erisman) எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகமான `அலிபாபாஸ் வேர்ல்டு’ என்கிற புத்தகத்தை இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்.

1998-ம் ஆண்டு ஜாக் மாவின் அபார்ட்மென்ட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மின்வணிக இணையத்தளம், 17 ஆண்டுகளில் அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரமானது. சீன நிறுவனமொன்று உலகளவில் இயங்க வேண்டும் என்பது ஜாக் மாவின் லட்சியமாக இருந்தது. அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த `வெப் 2.0’ என்கிற கருத்தரங்கில் பேசும்போது, `நான் 100 சதவிகிதம் `Made in China’. நானாக ஆங்கிலம் படிக்கக் கற்றுக்கொண்டேன். எனக்குத் தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாது. அலிபாபா இந்த அளவுக்கு வெற்றி பெறக் காரணம், எனக்கு கணினி பற்றி எதுவும் தெரியாமல் ஒரு குருடனாகக் குருட்டுப் புலி ஒன்றின் மீது உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருப்பதுதான்’ என வெளிப்படையாகக் கூறினார். அந்தக் கருத்தரங்கின்போது இவர் பேசுவதையெல்லாம் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர் மின்வணிகத்தின் முன்னோடி யான அமேஸானின் சிஇஓ ஜெஃப் பெஜோஸ்!

அலிபாபா என்பது உலகளவில் பரிட்சயமான பெயர். `ஓப்பன் சீசேம்’ என்று சொன்னவுடன் புதையல் இருக்கக்கூடிய குகையின் கதவு எப்படித் திறக்குமோ, அதுபோல இணையத்தளம் மூலம் புதையலை வழங்கக்கூடியதாகத் தமது இணையத் தளம் இருக்க வேண்டுமென்று ஜாக் மா விரும்பினார். சீனாவில் தயாரிக்கும் பொருட்கள் உலகம் முழுமை யும் சென்றடைய வேண்டுமெனில், `பிசினஸ் டு பிசினஸ்” அதாவது, வாங்குபவர்/விற்பவர், ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சந்தித்துக் கொள்ளும் ஒரு சந்தை’யாக இருந்தால்தான் நல்லது. இ-பே போல, ஒரு பொருளுக்கு பலபேர் ஏலத்தொகையைக் குறிப்பிடும் சந்தையாக நமது இணையத்தளம் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் ஜாக்.

இ-பே `ஈச்நெட் (Each Net)’ என்கிற சீன நிறுவனத்துடன் கைகோத்து செயல்பட்டு வந்ததால், ஆன்லைன் ஏலச் சந்தையில் (auction market) அவர்கள் முன்னணியில் இருந்தார்கள். இருந்தாலும் அலிபாபா சீன சந்தைக்கு ஏற்றாற்போல, தனது யுக்தியை வடிவமைத்துக் கொண்டது. அலிபாபா இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் மொத்த வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை இ-பே கூடிய சீக்கிரம் கவர்ந்திழுக்கக்கூடும் என்று ஜாக்கின் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது.

 அதனால் அவர் தனது குழுவில் நல்ல திறமை கொண்ட ஆறு பேரை அழைத்து, `நாம் ஒரு ரகசிய திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதில் பங்கெடுக்க விருப்பம் இருந்தால், தற்போது அவர்கள் வேலை பார்த்து வரும் அலிபாபா நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு ரகசியமான ஓர் இடத்துக்குச் சென்று அந்தத் திட்டத்தில் ஈடுபட வேண்டும். இதுகுறித்து அவர்கள் தங்கள் நண்பர் களிடமோ அல்லது உறவினர்களிடமோ `மூச்’ விடக்கூடாது’. இதற்குச் சம்மத மென்றால் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், அலிபாபாவிலேயே தொடர்ந்து வேலை செய்யுங்கள். என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ எனக் கூறிய சில நிமிடங்களில் ஆறுபேரும் சவாலை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தனர்.

அந்தத் திட்டம்தான் “Taobao (டாபோ)” என்கிற இணையத்தளம் ஆரம்பிக்கும் திட்டமாகும். இது அலிபாபா.காம், இ-பே இணையத்தளங்களின் சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாகும். இது அலிபாபா குழுமத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அங்கு வேலை பார்த்து வந்தவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் ஆச்சர்யமாக ஜாக்கிடம் வந்து `டாபோ’ என்று ஓர் இணையத்தளம் புதிதாக வந்திருக்கிறது. ஏறக்குறைய அலிபாபா.காம் போலவே இருக்கிறது. சந்தையில் நம்மோடு அவர்களும் போட்டியிடுவார்கள்” எனக் கூறினார்கள்.

இந்தத் தளம் நுகர்வோர்களுக்கானது. இதில் தங்களது பொருட்களைப் பட்டியலிட விரும்பும் நிறுவனங்கள்/விற்பனையாளர்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை என `தடாலடி’யாக அறிவித்தார். அப்புறம் என்ன, இ-பேக்கான ஆதரவு குறைய ஆரம்பித்தது. 

`டாபோ’ மளமளவென்று வளர்ச்சி அடைந்தது.

இதுமாதிரியே கூகுளும் அலிபாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவர்களின் அணுகுமுறை சரியில்லாததால், ஜாக் அவர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடர வில்லை. `யாகூ! சைனா’ கூகுளுடன் போட்டியிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாக்கை அணுக `யாகூ! சைனா’ அலிபாபா வின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. `யாகூ! சைனா’ அலிபாபா குழுமத் தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததற்குப் பதிலாக, குழுமத்தின் 40 சதவிகித பங்கு யாகூவுக்குக் கிடைத்தது. இது சீன தேடு பொறியான (search engine) `பைடு’-(Baidu)’க்குப் போட்டியாக அமைந்தது.

இதன்மூலம் அலிபாபா என்கிற குழுமத்தின் கீழ் `பிசினஸ் டு பிசினஸ் (அலிபாபா.காம்), `பிசினஸ் டு கன்ஸ்யூமர் (டாபோ), தேடுபொறி (யாகூ! சைனா), பணம் செலுத்துவதற்கான நுழைவுவாயில் (அலிபே – Alipay), சில பொருட்களை மட்டும் வாங்க நினைப் பவர்களுக்கு `அலி எக்ஸ்பிரஸ்” என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கிடைக்குமாறு தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை `ஜாக் மா’ விரிவாக்கினார்.

அலிபாபாவின் இந்த வியத்தகு வளர்ச்சி பற்றிச் சொல்லிவிட்டு, அலிபாபாவும் நாற்பது திருடர் களும்போல, `அலிபாபாவும் நாற்பது படிப்பினை களும்’ என்பதை இறுதிப் பகுதியில் கொடுத்திருக் கிறார் புத்தக ஆசிரியர். அந்தப் படிப்பினைகளில் சில இனி...
1. பெரிதாகக் கனவு காணுங்கள்.

2. உங்களைப் பற்றித் தாழ்வாக நினைக்காதீர்கள்.

3. உங்கள் போட்டியாளர் பற்றித் தேவைக்கு அதிகமாக ஒருபோதும் எடை போடாதீர்கள்.

4. உங்களிடம் சிறப்பான `யோசனை (ஐடியா)” இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

5. பிரச்னை அதிகமிருப்பின் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

6. இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்; ஆனால் நாளை மறுநாள் அது அழகாக இருக்கும்.

7. வாடிக்கையாளர்போல் கவனம் செலுத்துங்கள்; மற்ற அனைத்து அம்சங்களும் உங்களைப் பின்தொடரும்.

8. போட்டியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், காப்பி அடிக்காதீர்கள்.

9. முயலைப் போல வேகமாக இருங்கள்; ஆமையைப் போலப் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.

10. முதலாவதாக இருப்பதைவிட, சிறப்பாக இருப்பது முக்கியம் (It’s more important to be best than first).

11. சிக்கலின்போது அதிலிருக்கும் வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

12. தொழில் வளர்ச்சிக்கு இலவசம் / தள்ளுபடி ஓரளவுக்குத்தான் உதவும். அது நீண்ட நாட்களுக் கான யுக்தி இல்லை.

இந்தப் புத்தகத்தில் சில பக்கங்களைப் படிக்கும்போது சோர்வு தட்டுகிறது. ஆனாலும், இந்த `ஸ்டார்ட்-அப்’ யுகத்தில் தொழில்முனை வோர்களாக விரும்புவர்களும், தனது தொழிலை விருத்தி செய்துகொள்ள விரும்புவர்களும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

சித்தார்த்தன் சுந்தரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick