வீட்டுக் கடன்... ஃபிக்ஸட் ரேட் Vs ஃப்ளோட்டிங் ரேட் - எது பெஸ்ட்?

வீட்டுக் கடன் வாங்குபவர் களில் பலருக்கும்  இருக்கும் குழப்பம், ஃபிக்ஸட் (Fixed Interest Rate), ஃப்ளோட்டிங் (Floating Interest Rate) வட்டி விகிதங்களில் எதைத் தேர்வு செய்வது என்பதே.  இந்த இரண்டு வட்டி  விகிதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.

கடன் வாங்கும் தகுதி!

''வீட்டுக் கடன் வாங்கும்போது வருமானத்தில் செலவு போக, மீதமுள்ள தொகையில் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யைச் செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். இஎம்ஐ திரும்பச் செலுத்த  உங்களின் சம்பளத் தில் 50 சதவிகித தொகைதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும்.  அதாவது, நீங்கள் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறீர்கள் எனில், அதில் ரூ.25 ஆயிரம்தான் இஎம்ஐ செலுத்த முடியும் என வங்கி எடுத்துக்கொள்ளும். அதன் அடிப்படையில்தான் உங்கள் கடன் தொகை நிர்ணயிக்கப் படும்.

நிலையான வட்டி விகிதம்!

நிலையான வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரே தொகையை இஎம்ஐ-ஆக செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதாரத்தில் எந்த விதமான மாற்றங்கள் ஏற்பட் டாலும் அதன் பாதிப்பு கடன் தொகையில் இந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில் பிரதிபலிக்காது.

வீட்டுக் கடன் வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள்  இந்த இரண்டு வகையான வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன. ஆனால், சில முக்கிய பொதுத் துறை வங்கிகள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் மட்டும்தான் கடன் வழங்குகிறது.

தனியார் துறை நிறுவனங்கள் இந்த இரண்டு வட்டி விகிதத் திலும் கடன் வழங்குகிறது. கடன் காலத்தின் ஆரம்பத்தில் மட்டும் தான் ஃபிக்ஸட் வட்டி விகிதம் இருக்கும். அதன்பிறகு வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தில் தான் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

மாறுபாடும் வட்டி விகிதம்!

மாறுபடும் வட்டி விகிதம் பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் இருக்கும். ஒவ்வொரு வங்கியும் அடிப்படை வட்டி விகிதம் வைத்திருக்கும். இதிலிருந்து ஓரிரு சதவிகிதம் கூடுதலாக இந்த வட்டி விகிதம் இருக்க வாய்ப்புள்ளது.

விலைவாசி உயரும் காலங் களில் இந்த வட்டி விகிதம் உயரும். இதன் விளைவாக வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ தொகையும் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம், விலைவாசி குறையும் சமயங்களில் இந்த வட்டி விகிதமும் குறையும். அந்தச் சமயத்தில் மாறுபடும் வட்டி விகிதம் லாபமாக இருக்கும்.  இப்போது பெரும்பாலான வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் வங்கி யின் அடிப்படை வட்டி விகிதத் திலே கடன் வழங்குகிறது.

மாறுபாடும் வட்டி விகிதம் நிலையான வட்டி விகிதத்தைவிட குறைவாக இருக்கும். இதன் விளைவாக, கடனுக்கான வட்டித் தொகை குறைய வாய்ப் புள்ளது. ஆனால், வட்டி விகிதம் உயரும் சமயங்களில் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

நீண்ட காலத்தில் எந்த வட்டி?

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தொழில் வளர்ச்சி ஏற்பட்டு உற்பத்தி அதிகமாகும் போது, விலைவாசி குறைய வாய்ப்புள்ளது.

மேலும், புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன. பணவீக்க விகிதமும் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் நிலை யான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது சரியான தேர்வாக இருக்காது. ஏனெனில், இனிவரும் காலத்தில் வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எனவே, இப்போது புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எந்த வட்டி லாபம்?

ஒருவர் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை,  20 வருட காலத்துக்கு 9.5 சதவிகித ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த 20 ஆண்டு களில் அவர் சரியாக திரும்பச் செலுத்தி இருந்தால், கடனைக் கட்டி முடியும் தருவாயில் அவர் மொத்தம் 24.74 லட்சம் ரூபாய் வட்டியாகச் செலுத்தி இருப்பார்.

அதே கடனை ஃபிக்ஸட் வட்டி விகிதத்தில் (அதாவது, முதல் 5 வருடம் 10.5% வட்டி, அதன்பிறகு 9.5% வட்டி) கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் வட்டியாக மொத்தம் 25.93 லட்சம்  ரூபாய் செலுத்தியிருப்பார்.

ஆக, ஃப்ளோட்டிங் வட்டியில் கடன் வாங்கியவர் 1.19 லட்சம் ரூபாய் குறைவாகச் செலுத்தி இருப்பார். இதுவே, முதல் ஐந்து வருடங்களில் வட்டி குறைய ஆரம்பித்தால் நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருப்ப வர்கள் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

தற்போது மத்தியில் அமைந்துள்ள அரசு, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகும். வளர்ச்சி அதிகரிக்கும்போது, பணவீக்க விகிதம் குறைந்து வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும்!

இரா.ரூபாவதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick