கணவன்-மனைவி கூட்டு வீட்டுக் கடன்... என்னென்ன லாபம்?

ன்றைக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டு மெனில் அதற்கு நிறையப் பணம் தேவை.  ஒருவர் மட்டுமே வேலை பார்த்து, அவர் சம்பாதிக்கும் வருமானத்தின் அடிப்படையில்  கிடைக்கும் வீட்டுக் கடனை வைத்து வீடு வாங்க முடியாத சூழல்.  எனவே, புறநகரில்தான் வீடு வாங்க வேண்டிய கட்டாயம் பலருக்கு. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு கணவனும், மனைவியும் கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து, கூடுதல் கடன் தொகையைப் பெறுவதே. தவிர, இப்போது கணவன், மனைவி என இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதிப்பது பல வீடுகளில் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. இந்த நிலையில்,  அவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை  விளக்கமாக எடுத்துச் சொன்னார் ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணன்.

‘‘இன்றைக்கு கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்று நிறையச் சம்பாதிக்கிறார்கள். கணவனும், மனைவியும் சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடன் வாங்கும் போது அவர்களுக்குப் பலவி தமான வரிச் சலுகைகள் கிடைக்கும். கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவதில் கிடைக்கும்  முக்கியமான விஷயம், அதிகத் தொகைதான். 

கூடுதல் கடன் தொகை!

வேலையில் இருக்கிற கணவ னும், மனைவியும் கூட்டாகச் சேர்ந்து வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்  போது, அவர்களால் தனிநபர் செலுத்துவதைவிட அதிகமாக மாத தவணைத் தொகை செலுத்த முடியும் என்பதால், அவர்களுக்கு அதிக தொகை கடனாகக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு, வேலைக்குச் செல்லும் கணவன் மட்டும் வீட்டுக் கடனுக்காக விண்ணப் பித்தால், அவர் சம்பாதிக்கும் வருமானத்துக்கேற்ப கடன் கிடைக்கும்.  ஆனால்,  மனைவி வேலை பார்த்து, அவர் பெயரிலும் கூட்டாகக் கடன் கேட்டு விண்ணப்பித்தால், கூடுதல் தொகை கிடைக்கும்.   இதனை வைத்து நகர்ப்புறத்திலேயே வீடு வாங்க முடியும்.

வரிச் சலுகை!

கணவனும், மனைவியும் கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கும்போது சில வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இருவரும் சேர்ந்து செலுத்துகிற வட்டி மற்றும் அசலின் மீது தனித் தனியாக வரிச் சலுகையைப் பெற முடியும்.

அதாவது, வீட்டுக் கடன் வாங்கிய தனிநபருக்கு திரும்பச் செலுத்தும் அசலில் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகையாகக் கிடைக்கும். ஆனால், கணவன் - மனைவி கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால், மனைவிக்கு ரூ.1.5 லட்சம், கணவனுக்கு ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

இந்தச் சலுகையைப் பெற வீட்டுக் கடன் வாங்கிய இருவரும் வீட்டின் உரிமையாளர்களாக ஆவணத்தில் பதிவாகியிருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்காகச் செலுத்தும் வட்டியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரைக்கும் தனி நபருக்கு வரிச் சலுகை உள்ளது. கணவன் - மனைவி கூட்டாக வாங்கும்போது ரூ.4 லட்சம் வரைக்கும் வட்டி செலுத்துவதில் வரிச் சலுகையாகப் பெற முடியும்.

வீட்டைக் கட்டி வாடகைக்கு விடும்பட்சத்தில், வாடகையை வருமானமாகக் காட்டினால், திரும்பக் கட்டும் அசலுக்கு கணவன் - மனைவிக்குத் தனித் தனியே ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். வட்டியைப் பொறுத்தவரையில் முழுவட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டில் குடியிருக்கும்பட்சத் தில் ஹெச்ஆர்ஏ-க்கு  (வீட்டு வாடகை படி) வரிச் சலுகை பெற முடியாது. ஆனால், வீட்டை வாடகைக்குவிட்டால் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை கள் கிடைப்பதோடு, ஹெச்ஆர்ஏக்கும் வரிச் சலுகை பெற முடியும்” என்றார். கணவனும் மனைவியும் கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிற பட்சத் தில், அதைத் தவறவிடுவானேன்?

த.சக்திவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick