கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் மஞ்சள் விலைபோக்கு குறித்து சொல் கிறார் கார்வி கமாடிட்டி புரோக்கிங் நிறுவனத் தின் ரிசர்ச் ஹெட் வீராஸ் ஹிரமத்.

மஞ்சள் (Turmeric)

''முந்தைய வாரத்தில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக கடந்த வாரம் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. வாரத்தின் தொடக்கத்திலேயே இறக்கத்தில் வர்த்தகமான மஞ்சள், வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் ஏற்றத்துடன் காணப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, விலை ஏற்றம் பெறுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, தற்போதைய நிலையில் இருப்புக் குறைவாக காணப்படுவது. மற்றொன்று, புது வரத்து வருவதற்கான பருவம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது.

மஞ்சள் தேவை குறைந்து காணப்படுவதால், வரும் வாரங்களிலும் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகும். மேலும், மஞ்சள் விளையும் வட இந்திய மாநிலங்களில் அதிகமான மழைப்பொழிவு காணப்படுவதும் விலை இறக்கத்துக்கு காரணமாக இருக்கிறது. மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து மஞ்சளுக் கான ஆர்டர்கள் குறைந்து காணப்படுவதும் விலை இறக்கத்துக்கான காரணம்''.

ஜீரகம் (Jeera)

சென்ற வாரம் ஜீரகத்தின் விலை அதிகரித்துக் காணப் பட்டது. காரணம், சந்தைக்கு வரத்து குறைந்து காணப்பட்டது தான். ஜீரகம் விளையும் ஏரியாக் களில் மழைப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டதும் விலை ஏற்றத்துக்கு இன்னொரு காரணம். இனிவரும் காலங்களில் இந்திய ஜீரகத்தின் மீதான ஏற்றுமதி தேவை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால், விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் ஜீரகத்தின் இருப்பும் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி, இதன் கிடங்கில் 17,043 டன் ஜீரகம் இருப்பு இருப்பதாகவும், இது இதற்கு முந்தைய வாரத்தில் 17,844 டன் ஜீரகம் இருந்ததாகவும் என்சிடிஇஎக்ஸ் தெரிவித்துள்ளது.

2014-15-ம் ஆண்டின் அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் குஜராத் மாநிலத்தில் உற்பத்தியான ஜீரகத்தின் அளவு 1.58 லட்சம் டன். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தைவிட 54% குறைவாகும். ஜீரக விளைச்சலுக்கான பருவ நிலை மோசமாக இருப்பதாலும், சந்தைக்கு வரத்து மற்றும் உற்பத்தி குறைந்து காணப்படுவதாலும் இனிவரும் வாரங்களில் ஜீரகம் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக்காய் (Cardamom)

சந்தைக்கு வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், சென்ற வாரம் ஏலக்காய் விலை குறைந்து ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக 622 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 955 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

கடந்த வியாழக்கிழமையில் நடந்த வர்த்தகத்துக்கு மட்டும் 68 டன் ஏலக்காய் வந்திருப்பதாக நறுமணப் பொருட்களின் வாரியம் தெரிவித்துள்ளது. வரும் பருவத்தில் தரமான ஏலக்காய் சந்தைக்கு வரும்பட்சத்தில் மேலும் விலை குறையாமல் தடுக்கப்படும். தற்போதைய நிலையில் உற்பத்தி அதிகரித்து, அதன் காரணமாக வரத்து அதிகரித்துக் காணப்படுவதால், வரும் வாரத்திலும் விலை குறைந்து காணப்படும்.

கொத்துமல்லி (Coriander)

கொத்துமல்லி அதிகம் விளையும் ஏரியாக்களில் மழைப்பொழிவு அதிகரித்துக் காணப்படுவதால், விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்ற வாரம் கொத்துமல்லி விலை குறைந்து வர்த்தகமானது. அதுமட்டு மல்லாமல், சென்ற வாரம் சந்தைக்கு அதிக வரத்து மற்றும் தேவை குறைந்து காணப்பட்டதும் விலை குறைவுக்குக் காரணம்.

ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் 40,369 டன் கொத்துமல்லி காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 39,680 டன்னாகக் காணப்பட்டது.

சந்தை நிலவரப்படி, 2014-15-ம் ஆண்டில் ராஜஸ்தானில் கொத்துமல்லி உற்பத்தி இதற்கு முந்தைய ஆண்டைவிட 23% அதிகமாகவும், மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டைவிட 10% அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் வரும் வாரங்களில் கொத்துமல்லியின் விலை குறைந்து காணப்படலாம்!

செ.கார்த்திகேயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick