என்பிஎஸ்...10 சிறப்பு அம்சங்கள்!

ய்வுக்காலத் தேவைகளுக்காக பிள்ளைகளைச் சார்ந்திராமல், தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இளமையில் இருந்து சேமிக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் தேசிய ஓய்வூதியத் திட்டம். இந்தத் திட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, வேறு யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், அதற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையை எடுத்துக் கொடுக்க நீதிமன்றத்தினால்  உத்தரவிட முடியாது. அந்த அளவுக்கு இது ஓய்வுக்கால பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பம்சங்களை இனி பார்ப்போம்.

நிரந்தர எண்!

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 17 இலக்க நிரந்தர பிஆர்ஏஎன் கணக்கு (Permanent Retirement Account Number) எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்தான் வழங்கப்படும். இந்த எண் மூலமாக இந்தியாவில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானா லும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். பிஆர்ஏஎன் பதிவு செய்த இருபது நாட்களில் இந்த எண் மற்றும் அதற்கான கார்டு கிடைத்துவிடும். அதற்கான தகவல் எஸ்எம்எஸ் அலெர்ட் அல்லது இ-மெயில் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

வயது வரம்பு!

18-60 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள், பெண்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டுத் தொகை!

ஒரு வருடத் துக்கு குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஒருமுறை முதலீட்டுத் தொகை 500 ரூபாய். இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான ஸ்கீம் உள்ளது. டயர் 1 கணக்கு பென்ஷன்தாரர்களுக்கானது. இதில் முதலீடு செய்யப்படும் தொகையை 60 வயதுக்குமுன் எடுக்க முடியாது.

டயர் 2 கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்க முடியும். இந்தக் கணக்கை கூடுதல் சேமிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், டயர் 1 கணக்கு இருந் தால்தான் டயர் 2 கணக்கைத் துவங்க முடியும். கணக்குத் துவங்கும்போது குறைந்தபட்சம் டயர் 1 கணக்கில் ரூ.500, டயர் 2 கணக்கில் ரூ.1,000 செலுத்த வேண்டியிருக்கும்.

வயது அடிப்படையில் முதலீடு!

ஓய்வூதியக் காலத்துக்காக இருக்கும் இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை அதிக ரிஸ்க் இல்லாத நிரந்தர வருமானம் தரக்கூடியது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டுப் பிரிவுகளைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள முடியும். அதாவது, ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வகையில் முதலீட்டைத் தேர்ந் தெடுக்க முடியும்.

என்பிஎஸ் வாடிக்கை யாளர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும், எந்த வகை யான முதலீட்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லையெனில், அவர்களின் வயது அடிப்படையில் முதலீடு செய்யப்படும். இளம் வயதில் இருப்பவர்களுக்கு அதிக ரிஸ்க் உடைய முதலீடும், வயது அதிகமாக இருப்பவர்களுக்கு குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடும் தேர்வு செய்யப்படும். முதலீடு களை e, c மற்றும் g என மூன்று வகையாகப் பிரித்து முதலீடு செய்கிறார்கள்.

e - அதிக வருமானம், அதிக ரிஸ்க்

c - நடுத்தர வருமானம், நடுத்தரமான ரிஸ்க்.

g - குறைவான வருமானம், குறைவான ரிஸ்க்.

ஒரு முதலீட்டுத் திட்டத்தில் இருந்து இன்னொரு முதலீட்டுத் திட்டத்துக்கு மாற முடியும். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டும்தான் இப்படி மாற முடியும். இதற்கு கட்டணம் உண்டு.

ஆன்லைன் வசதி!

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இதற்கு பிஓபி  (Point To Presence ) உதவி, அதாவது வங்கி மற்றும் தபால் அலுவலக ஊழியர்களின் உதவி தேவைப்படும். அங்குச் சென்று உங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தபின் உங்களுக்கான கணக்குத் தொடங்கப்படும். அதன்பிறகு அந்தக் கணக்கு குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு பாஸ்வேர்டு வழங்கப்படும்.

https://npscra.nsdl.co.in/download/government-sector/central-government/forms/S1_Subscriber%20Registration%20form.pdf என்ற இணைய தளத்தில் என்பிஎஸ் கணக்குத் துவங்குவதற்கான படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ள லாம். இந்தத் திட்டம் தொடர் பான அனைத்து தகவல் மற்றும் குறைகளை 1800222080 என்ற ஐவிஆர் எண்ணை  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அப்படி தெரிவித்தால், அதற்கான தீர்வு வழங்கப்படும். தீர்வு கூற முடியவில்லையெனில் அந்தக் குறையானது தொடர்புடைய துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இடையில் பணம் எடுத்தல்!

என்பிஎஸ் திட்டத்தில் இடையில் பணம் எடுக்க முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது உள்ள புதிய விதிமுறைகளின்படி, முதல் பத்து வருடங்களுக்குள் பணத்தை வெளியே எடுக்க முடியாது. அதன்பிறகு, டயர் 1 கணக்கில் முதலீடு செய்துள்ள தொகையில் 25 சதவிகித தொகையை எடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 அதாவது, திருமணம், குடும்ப உறுப்பினர்களுக்குத் தீவிர நோய் பாதிப்பு, உயர்கல்வி, திருமணம், முதல்முறையாக வீடு வாங்குவது போன்ற காரணங்களுக்காக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். என்பிஎஸ் கணக்கிலிருந்து மொத்தமாக மூன்று முறைதான் இடையில் பணம் எடுக்க முடியும். குறைந்தபட்சம் ஐந்து வருட இடைவெளியில்தான் பணத்தை எடுக்க முடியும்.

முதலீடும், வருமானமும் அதிகரிப்பு!

என்பிஎஸ் திட்டத்தில் ஆரம்பக் காலங்களில் அதிகக் குழப்பம் இருந்தது. அதனால் இதில் முதலீடு செய்வதற்கு பலரும் யோசித்தார்கள். ஆனால், இப்போது குழப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக முதலீடு செய்யப்படும் தொகையின் அளவு அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருந்த ரூ.48,105 கோடி முதலீடு, 2015 மார்ச் 31-ம் தேதி வரை ரூ.86,532 கோடியாக உயர்ந் துள்ளது. இதேபோல, வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது, 2014-ம் ஆண்டில் 65,06,180-ஆக  இருந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, தற்போது 2015-ல் 91,68,724-ஆக உயர்ந்துள்ளது.

என்பிஎஸ் திட்டத்தில் இருக்கும் வருமானத்தை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள முடியாத வாய்ப்பு இருந்தது. இதைத் தீர்க்கும் விதத்தில் தற்போது ஒவ்வொரு முதலீட்டுப் பிரிவுக்கும் முதலீட்டு வருமானம் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது. எந்த முதலீட்டுப் பிரிவுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை http://www.npstrust.org.in/index.php/navreturns/returns என்ற இணையதளத்தில் பார்க்க முடியும்.

கட்டணங்கள்!

என்பிஎஸ் திட்டத்தில் கணக்குத் துவங்குவதற்குக் கட்டணம் ரூ.35 - 50, ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.50 - 190, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.4 என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக கட்டணம் உண்டு.  இந்தக் கட்டண விவரத்தை http://www.npstrust.org.in/images//FeesChargesNPS.pdf என்ற லிங்கில் பார்க்கலாம். என்பிஎஸ் திட்டத்தில் நிர்வாகக் கட்டணம் மிகவும் குறைவு. அதாவது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு 1 - 2 சத விகிதம் நிர்வாகக் கட்டணம் இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் 0.01 சதவிகிதம் ஆகும்.

முதிர்வு தொகை!

என்பிஎஸ் டயர் 1 திட்டத்தில் வாடிக்கை யாளராகச் சேர்ந்த பிறகு கணக்கை இடையில் நிறுத்திக் கொள்ளும்போது அந்தப் பணத்தில் 20 சதவிகித தொகை தான் கையில் கிடைக்கும். மீதமுள்ள 80 சதவிகித தொகை பென்ஷனுக்காக ஒதுக்கப்பட்டு விடும். இதை 60 வயதுக்குப் பிறகுதான் எடுக்க முடியும். இடையில் வாடிக்கையாளர் மரணம் அடைந்துவிட்டால் அதற்கான ஆதாரத்தைக் கொடுத்து முழுத் தொகையையும் பெற முடியும். 60 வயதுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது 40 சதவிகித தொகையைக் கட்டாயம் ஓய்வூதியத் திட்டங் களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 சதவிகித தொகை தான் கிடைக்கும்.

வரிவிலக்கு!

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சிசிடி-ன்படி கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய்க்கும், 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கும் வரிவிலக்கு பெற முடியும். ஆக மொத்தமாக, 2 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்கு பெற முடியும்.

படம்: இரா.யோகேஷ்வரன்

இரா.ரூபாவதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick