கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்தவாரம் மஞ்சள் விலைபோக்குக் குறித்துச் சொல்கிறார் கமாடிட்டி சந்தை நிபுணர் கதி சோலையப்பன்.

மஞ்சள் (TURMERIC)

"கடந்த வாரம் சந்தைக்கு வந்த மஞ்சளின் தரமானது எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், மஞ்சளின் விலை குறைந்தே வர்த்தகமானது. முக்கிய மஞ்சள் வர்த்தகச் சந்தைகளில் ஒரு குவிண்டால் கிழங்கு மஞ்சள் ரூ.6,800-7,000 வரை விலை போனது. இது இதற்கு முந்தைய வாரத்தை விடக் குறைவாகும். அதேபோல் ஒரு குவிண்டால் விரலி மஞ்சளின் விலை ரூ.6,900-7,000 ரூபாய் வரை விலை போனது. மஞ்சளின் தரம் குறைந்து காணப்பட்டதாலேயே சந்தைக்கு வந்த வரத்துகளில் 60% மட்டுமே வர்த்தகமானதாகச் சந்தை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இருப்பினும் வரவிருக்கும் தசரா மற்றும் தீபாவளியை ஒட்டி வட இந்தியாவில் மஞ்சளின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வரும் தரமான மஞ்சள் களை வர்த்தகர்கள் வாங்கிச் சேமித்து வருகிறார்கள்.

சந்தை நிலவரப்படி, இன்னும் ஒரு மாதத்தில் தரமான மஞ்சளின் விலை சுமார் 10% அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தவிர, மஹாராஷ்ட்டிராவில்  பெய்த அளவுக்கு அதிகமான மழை காரணமாக மஞ்சள் பயிர்கள் அதிகமாகவே சேதம் அடைந்து உள்ளன. இதுவும் மஞ்சள் விலை உயர்வுக்குக் காரணமாக அமையும்.''

ஏலக்காய் (CARDAMOM)

கடந்த வாரத்தில் தரமான வரத்து காணப்பட்டதால், வர்த்தகர்கள் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த வாரம் புதன்கிழமையில் 60 டன் ஏலக்காய் வரத்துக் காணப்பட்டது. அன்றைய தினத்தில் ஒரு கிலோ ஏலக்காய் குறைந்தபட்ச விலை 650 ரூபாய்க் கும், அதிகபட்ச விலை 952 ரூபாய்க்கும் காணப்பட்டது.

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையில் சிறிய ரக ஏலக்காய் களை மறுநடவு செய்வதை ஊக்குவிக்க மானியமாக 70,000 ரூபாயை வழங்குவதாகச் சொல்லி இருக்கிறது. இதனால் சிறிய ரக ஏலக்காய் விளைச்சல் அதிகரித்துக் காணப்படும்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள சிறிய ரக ஏலக்காய் விவசாயிகளுக்கு 70,000 ரூபாயும், கர்நாடகாவிலுள்ள சிறிய ரக ஏலக்காய் விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும் மானியமாகக் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், அறுவடை மேம்பாட்டுக்கான உதவியையும் இந்திய நறுமணப் பொருட்களின் வாரியம் சிறிய ரக ஏலக்காய் விவசாயிகளுக்குச் செய்து தர  முடிவு செய்திருப்பதையும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜீரகம் (JEERA)

கடந்த வாரத்தில் வரத்து அதிகமாக இருந்ததால், ஜீரகத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இனிவரும் வாரங்களில் உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மேலும் விலை குறையாமல் தடுக்கப்படும்.

கடந்த வாரம் வியாழக்கிழமை  அன்று உஞ்ஹா சந்தைக்கு 4,000 பைகள் வரத்துக் காணப்பட்டது. இது இதற்கு முந்தைய நாளைவிட அதிகமான வரத்தாகும். ஜீரகத்தின் மீதான ஏற்றுமதி தேவை அதிகரித்துக் காணப்படுவதால், வரும் நாட்களில் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜீரகத்தின் விலை போக்கு நன்றாக இருப்பதால் விவசாயிகள் ஜீரகத்தை அதிகமாக விதைத்திருக்கிறார்கள். இதனால் வருகிற 2015-16 பருவத்தில் அதிக விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ஜீரகம் அதிகம் விளையும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதுமான மழை பெய்திருப்பதால், வருகிற ராபி பருவத்தில் நல்ல வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொத்துமல்லி (CORIANDER)

கொத்துமல்லி அதிகம் விளையும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதுமான அளவுக்கு மழைப் பொழிவு இருப்பதால், நடப்புப் பருவத்திலேயே விளைச்சல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது விலை குறைந்து காணப்படுகிறது.

சந்தை நிலவரப்படி, 2014-15-ம் ஆண்டின் ராஜஸ்தான் மாநிலத்தின் கொத்துமல்லி உற்பத்தி 23% அதிகரித்துக் காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 1.24 லட்சம் டன்னாகக் காணப்பட்டது. குஜராத் மாநிலத்தின் கொத்துமல்லி உற்பத்தியும் கடந்த ஆண்டில் இருந்ததைவிட அதிகரித்துக் காணப்படுகிறது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முந்தைய ஆண்டைவிட 2014-15-ல் 10% உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. 

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதியில் என்சிடிஎக்ஸ் சந்தைக்குச் சொந்தமான கிடங்குகளில் 41,240 டன் கொத்துமல்லி இருப்புக் காணப்படுகிறது. தற்போதைய பருவநிலை கொத்துமல்லி விளைச்சலுக்குச் சாதகமாக இருப்பதாலும், உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதாலும் இனிவரும் வாரங்களில் கொத்துமல்லி விலை குறைந்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick